ADDED : ஜூலை 02, 2026 03:00 AM
காங்கயம்: நெடுஞ்சாலைத்துறையில், நிர்வாக வசதிக்காக பல்வேறு மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு, தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிலும் சில மாற்றங்களை செய்ய, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புக்கு முன், திருப்பூர் கோட்டத்தின் கீழ் பல்லடம், காங்கயம், அவிநாசி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய, 5 தாலுகாக்கள் செயல்பட்டு வந்தன. தற்போது, காங்கயம் பகுதி திருப்பூரிலிருந்து பிரிக்கப்பட்டு, வெள்ளகோவில் மற்றும் மூலனுார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி புதிய தனி கோட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்டத்தின் கீழ், ஊத்துக்குளி மற்றும் பொங்கலுார் ஆகிய இரு புதிய உட்கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், திருப்பூர் கோட்டத்தில் உதவி பொறியாளர் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுக்குப் பின், திருப்பூர் கோட்டமானது தற்போது பல்லடம், அவிநாசி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு என, 4 தாலுகாக்களை உள்ளடக்கி செயல்படும். இதன் கீழ் தற்போது, 6 உட்கோட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எல்லைப் பகிர்வு நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'மறுசீரமைப்பின் வாயிலாக அதிகாரிகளின் எல்லைப் பரப்பளவு குறைக்கப்பட்டாலும், நிர்வாகப் பரவலாக்கம் காரணமாக பணிகள் இனி விரைவாக நடைபெறும்.
இனி, சென்னை வரை செல்ல வேண்டிய அவசியமின்றி, கோவையிலேயே ஒப்புதல்களை பெற முடியும். ஒவ்வொரு கோட்டத்துக்கும் உரிய சாலைகளின் கி.மீ. பரப்பளவு உள்ளிட்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த எல்லைப்பகிர்வு குறித்த முழுமையான விவரங்கள், உயர் அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்குப் பின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்,' என்றனர்.
