தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான... திக்...திக்... சந்தை!மடத்துக்குளத்தில் மாற்றம் அவசியம்
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான... திக்...திக்... சந்தை!மடத்துக்குளத்தில் மாற்றம் அவசியம்
UPDATED : ஜூலை 02, 2026 05:58 PM
ADDED : ஜூலை 02, 2026 05:50 PM

உடுமலை: மடத்துக்குளத்தில், தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் இயங்கி வரும் வாரச்சந்தையை இடம் மாற்றவும், தினசரி சந்தையாக மாற்றி, பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மடத்துக்குளத்தில், சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடி வருகிறது.
வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பேரூராட்சி நுழைவுவாயில் என சுற்றிலும் அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில், புளிய மரங்களுக்கு கீழ், கூரை கொட்டகைகள் அமைந்த கடைகளில், சந்தை கூடி வருகிறது.
குறைந்தளவு கடைகள் மட்டுமே அமையும் வகையில், குறுகலாக இடத்தில் சந்தை வளாகம் அமைந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் சந்தை கூடும் நாட்களில், கடைகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு, ஏற்கனவே குறுகலாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்ட் நுழைவுவாயில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன், ஆய்வு மாளிகை, தாலுகா அலுவலகம் வரை ரோட்டில், கடைகள் அமைக்கப்படுகிறது.
தள்ளுவண்டிகளிலும், ரோட்டோரத்திலும் காய்கறிகள் குவித்து வைத்து, பலவகையான வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
மடத்துக்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், சந்தை கூடும் நாட்களில், பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரோட்டில் நின்று, பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.
ரோட்டோர கடைகள், சந்தைக்கு வரும் வாகனங்கள் என மிகவும் குறுகலாக ரோடு மாறி வரும் நிலையில், வாகன போக்குவரத்தும் அதிகளவு உள்ளதால், இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
அதோடு, சந்தைக்கு நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், மக்கள் நெரிசல் ஏற்படுவதோடு, எளிதில் தீ பிடிக்கும் கூரைகளால் ஆன கடைகளாக உள்ளதால், பொதுமக்களுக்கும் ஆபத்தான நிலை உள்ளது.
அதே போல் ,சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தேவையான, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.
இதனால், சந்தை வளாகத்தை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யும் வகையில், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், கொழுமம் ரோட்டில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆனால், சந்தை மாற்றம் குறித்து, பேரூராட்சி நிர்வாகமும் ,மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மடத்துக்குளம் தாலுகா தலைநகராக மாறியுள்ளதோடு, மக்கள் தொகை பெருக்கம் அதிகளவு உள்ளதால், சந்தை வளாகத்தை இடமாற்றம் செய்யும் போது, தினசரி காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும்.
மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில், தக்காளி, மிளகாய், வெங்காயம் என பல்வேறு காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், உற்பத்தி செய்த விளை பொருட்களை உடுமலை, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு பதில், மடத்துக்குளத்திலேயே ஏல முறையில் விற்பனை செய்யும் வகையில், சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல், தாலுகா தோறும் உழவர் சந்தை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், மடத்துக்குளத்தில் உழவர் சந்தை அமைக்கவும் ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அத்திட்டமும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மடத்துக்குளத்தில் தற்போதுள்ள சந்தை வளாகத்தை மாற்றவும், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி சந்தை , உழவர் சந்தை உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்க வேளாண் வணிகத்துறை, மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
