'மதிப்பான தொழில்முறையே சிறந்த ஆடிட்டரின் அடையாளம்'
'மதிப்பான தொழில்முறையே சிறந்த ஆடிட்டரின் அடையாளம்'
ADDED : ஜூலை 04, 2026 05:28 AM

திருப்பூர்: ''மதிப்பு கூட்டிய தொழில்முறை அணுகுமுறையே, சிறந்த ஆடிட்டர்களுக்கான அடையாளம்,'' என, முன்னாள் ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன் பேசினார்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் திருப்பூர் கிளை, திருப்பூர் சி.ஏ., மாணவர்கள் அமைப்பு சார்பில், சிறப்பு கருத்தரங்கு நேற்று திருப்பூர் ஆடிட்டர் சங்க அரங்கில் துவங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆடிட்டர் மாணவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் ஆடிட்டர் சங்க தலைவர் விஷ்ணுகுமார், மாணவர் சங்க தலைவர் ஸ்ரீவிக்னேஷ் முன்னிலையில் கருத்தரங்கு துவங்கியது.
முன்னாள் ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன், மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
நேர்மை, ஒழுக்கம் மற்றும் மதிப்பு கூட்டிய தொழில்முறை அணுகுமுறையே, சிறந்த ஆடிட்டர்களுக்கான அடையாளம்,'' என்றார்.
மாநில அளவிலான இந்த கருத்தரங்கில், மாணவர்களின் தொழில்துறை அறிவு, தலைமைத்துவம் மற்றும் தனித்திறன் மேம்பாட்டை மையமாக கொண்ட, அமர்வுகள் நடக்கின்றன.
முதல்நாளான நேற்று, கோவையை சேர்ந்த ஆடிட்டர் ஷண்டிப் சபாபதி, 'கவிதையாய் வாழ்' என்ற தலைப்பில், மாணவர்களை ஊக்குவித்து பேசினார்.
நிதிநிலை அறிக்கை மற்றும் நிலையான தணிக்கை என்ற தலைப்பில், ஆடிட்டர் கல்யாணராமன் பேசினார். வாழ்க்கை திறன் குறித்த தலைப்பில், ஆடிட்டர் மாலன் பாரதி பேசினார். ஆடிட்டர் ப்ரீத்தா, நேரடி வரி விதிப்பு குறித்த தொழில்நுட்ப கலந்தாய்வு நடந்தது.
இரண்டாம் நாளான இன்று முக்கிய தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்கள் பேசுகின்றனர். கருத்தரங்கில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆடிட்டர் பயிற்சி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
