/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா! ஊராட்சிகளில் பொருத்தப்படுமா?
/
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா! ஊராட்சிகளில் பொருத்தப்படுமா?
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா! ஊராட்சிகளில் பொருத்தப்படுமா?
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா! ஊராட்சிகளில் பொருத்தப்படுமா?
ADDED : ஆக 31, 2025 07:35 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் சுகாதாரத்தை மேம்படுத்தவும், துாய்மையான சூழலை பராமரிப்பதற்கும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை பாரத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, உரமாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில் திட்டம் முழுமையாக செயல்பாட்டில் இல்லை.
கழிவுகளை பொதுமக்கள் நேரடியாகவே திறந்த வெளியில் கொட்டுகின்றனர். அல்லது வீடுதோறும் சேகரிக்கப்படும் கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் நீர்நிலைகளின் அருகில் குவிக்கின்றனர்.
இதனால், கிராமங்களின் சுகாதாரம் பெயரளவில் மட்டுமே பராமரிக்கப்படுகிறது. மழைகாலங்களில் கழிவுகளில் மழைநீரும் தேங்கி நோய்த்தொற்றுகளையும் அதிகரிக்கிறது.
நகராட்சியின் எல்லையில் உள்ள கிராமங்களின் நிலை, இன்னும் மோசமாக உள்ளது. நகரவாசிகள் இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளுக்கு வந்து கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதற்கு எந்த ஒரு பணிகளும் நடப்பதில்லை.
அதற்கான குடில்கள் இப்போது கால்நடைகள் கட்டும் இடமாக மாறியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளும், கிராமங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை.
கழிவுகள் மட்டுமில்லாமல், பல கிராமங்களில் திறந்த வெளிக்கழிப்பிட அவலம் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தனி நபர் இல்லக்கழிப்பிட திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பலரும் வீடுகளில் கழிவறை இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை என பல காரணங்களை முன்வைத்து, திறந்த வெளியை கழிப்பிடமாக மாற்றிவிட்டனர்.
பள்ளி வளாகம், அங்கன்வாடி என்றும் பாராமல் அவற்றை சுற்றியுள்ள இடங்களையும் அசுத்தமாக்குகின்றனர்.
இதுபோல் பல கிராமங்களிலும் தொடரும் அவலத்தை தடுப்பதற்கு, ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா அவசியமாகிறது. ஊரக வளர்ச்சித்துறை அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.