ADDED : ஜூலை 01, 2026 11:34 PM

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் நந்தகுமார். இவரது மனைவி செந்தமிழ்செல்வி, 32. தம்பதி, பட்டி அமைத்து ஆடு வளர்த்தனர்.
நேற்று முன்தினம் ஆட்டுப்பட்டிக்கு சென்ற செந்தமிழ்செல்வி வீடு திரும்பவில்லை. காணக்கிளியநல்லுார் போலீசில் நந்தகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடினர். செந்தமிழ்செல்வியின் செருப்பு, மொபைல்போன் ஆகியவை ஏரிக்கரையில் இருந்துள்ளன.
நேற்று காலை, தீயணைப்பு துறையினர் ஏரியில் தேடியபோது, ஏரியின் நடுவே, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக செந்தமிழ்செல்வி சடலமாக மிதந்துள்ளார். உடலை தீயணைப்புத்துறை மீட்டனர். உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். திருச்சி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், விசாரணை நடத்தினார். தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
