தரமற்ற முறையில் தடுப்பணை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
தரமற்ற முறையில் தடுப்பணை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 01, 2026 04:31 AM

அணைக்கட்டு: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயத்திற்கு பயன்படவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக இந்த பணிகள், எந்தவித முறையான திட்டமிடலுமின்றி, மிக அவசர அவசரமாக நடத்தப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல, தடுப்பணைகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கட்டப்பட இருக்கும் இடத்தை முழுமையாக சமன்படுத்தாமல் மண், மணல் மீது தரமற்ற சிமென்ட் கலவைகள் போட்டு கட்டப்படுவதாக கூறுகின்றனர். இதனால், கட்டப்படும் தடுப்பணைகள், விரைவில் சேதமடையும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு தடுப்பணைக்கும், அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில், களத்தில் மிகக்குறைந்த செலவில் தரம் குறைந்த கட்டுமானங்களை அமைத்து வருவதாக தெரிகிறது.
மேலும்,இவை பருவமழை காலங்களில் நீரின் வேகத்தை தாங்க முடியாமல் உடைந்துவிடும். இதனால், அரசு பணம் வீணாவதுடன், விவசாயிகளுக்கும் எந்த பயனும் இல்லாமல் போகும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் தடுப்பணைகளின் தரம் குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் நேரில் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
