தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் வீரர்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் வீரர்
ADDED : ஜூலை 08, 2026 04:11 PM
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் விளையாட்டு, இன்று உலகெங்கும் அறியப்படும் பாரம்பரிய தற்காப்புக் கலையாக உருவெடுத்துள்ளது.
திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன், 45; கட்டட ஒப்பந்ததாரான இவர், சிலம்பம் வீரர். இவர், தினசரி காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை திண்டிவனம் மற்றும் சந்தைமேடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் இலவசமாக கற்றுத்தருகிறார்.
இதுகுறித்து சிலம்பம் பயிற்சியாளர் அருள்முருகன், கூறுகையில், ‘தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை, ஆசிரியர் ராஜேந்திரன் வழியில், ஆதி தமிழன் வீரக்கலை சிலம்பம் அறக்கட்டளை மூலம் கடந்த 7 ஆண்டுகளாக இலவசமாக கற்றுத்தருகிறேன்.
இங்கு அதிக அளவில் கிராமப்புறமாணவர்கள் பயில்கின்றனர். இங்கு பயிலும் சிலம்ப பயிற்சி மாணவர்கள் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய குறுவட்டம், மாவட்டம் அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.
பயிற்சியில், சிலம்பம் அடிமுறை பயிற்சி, ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, கத்தி, பால் சக்கரம், நட்சத்திர சக்கரம், அலங்கார சுற்று, போர் முறை பயிற்சி போன்றவற்றை கற்றுத் தருகிறேன்.
சிலம்பம் கற்றுக் கொள்வதால் ஒழுக்கம், புத்தி கூர்மை, உடல் பலம், அறிவுத்திறன், ஞாபகசக்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக தினந்தோறும் படிக்கின்ற மாணவர்கள் மொபைல்போனில் முழ்காமல் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சியாகவும் இருப்பதற்கு சிலம்பக்கலை பெரும் உதவியாக இருக்கும்’ என்றார்.
