முதல்வரின் மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
முதல்வரின் மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 08, 2026 06:30 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2026ம் ஆண்டிற்கான முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதல்வரின் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் சான்றிதழ், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2026ம் ஆண்டிற்கான முதல்வரின் மாநில இளைஞர் விருது வரும் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2025 ஏப்., 1ம் தேதி 15 வயது நிரம்பியவராகவும், கடந்த மார்ச் 31 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2025-–26), அதாவது 1.4.2025 முதல் 31.3.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.
அந்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 13ம் தேதி மாலை 5:45 மணி என நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
