ADDED : ஏப் 27, 2024 12:33 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த வி.கொத்தமங்கலம் ரேணுகாபரமேஸ்வரி, முத்தாலம்மன் கோவில் பிரமோற்சவ விழா தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த ஏப்., 18ம் தேதி வியாழக்கிழமை காலை குளக்கரையில் காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. 19ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, இரவு உற்சவர் ஆண்டாள் அவதாரத்தில் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டத்தை பக்தர்கள் திரளாக வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பகல் 1 மணிக்கு கழுமரம் ஏறுதலும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதலும், மாலை 4.30 மணிக்கு காவடி பூஜையும், மாலை 5 மணிக்கு அம்மனுக்கு செடல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

