அரசு பஸ் டிரைவரை தாக்கிய போதை வாலிபருக்கு தர்ம அடி
அரசு பஸ் டிரைவரை தாக்கிய போதை வாலிபருக்கு தர்ம அடி
ADDED : ஜூலை 09, 2026 02:46 AM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை, போதை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், அரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 52; அரசு டவுன் பஸ் டிரைவர். மரகதபுரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று மாலை 5:45 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, கண்டெக்டருடன் டீக்குடிக்க சென்றார்.
அப்போது போதையில் பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர், டிரைவரின் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடி னார். இதை பார்த்த பயணிகள் மற்றும் டிரைவர் தமிழ்செல்வன் ஆகியோர், வாலிபரை விரட்டி பிடித்தனர். ஆனால், பேக்கில் வைத்திருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை.
இந்த பணத்தை கேட்ட போது, டிரைவரை வாலிபர் தாக்கினார். இதில் டிரைவரின் வாயில் ரத்தம் வழிந்தது. உடன் சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் மதுரை, கூடல்புதுாரை சேர்ந்த அருண்குமார், 25; என்பதும், போதையில் பஸ் நிலையத்தில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
