உங்கள் கடமைகளில் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை
உங்கள் கடமைகளில் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை
ADDED : ஜூலை 04, 2026 08:59 PM
விக்கிரவாண்டி: 'வழக்கறிஞர்கள் தங்கள் கடமைகளை செய்வதில் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேசினார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை அடைக்கலாபுரம் அருகே 17 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத்அரவிந்த் தர்மாதிகாரி பேசியதாவது:
நீதிமன்றம் என்பது வெறும் செங்கல் மற்றும் சுவற்றால் ஆன கட்டடம் மட்டுமல்லை. மக்களுக்கு இந்த நீதிமன்றம் முன்மாதிரி வளாகமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மக்கள் தங்களின் குறைகளுக்கு தீர்வு காணவும், நீதியை பெறவும் உள்ள மையமாக திகழ்கிறது. இந்த நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த வசதிகள், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்து விரைவாக நீதி கிடைப்பதாகவும் அமைய வேண்டும்.
அனைத்து நீதித்துறை அதிகாரிகளும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பவர்கள். உங்கள் கடமைகளை ஆற்றவும், மன அமைதியோடு செயல்படுவதற்கான ஏற்ற சுழலை இந்த நீதிமன்றம் உருவாக்க வேண்டும். உங்கள் தீர்ப்புகள் சட்ட அறிவு, நேர்மை, மனிதாபிமானம் ஆகிய உயர்ந்த தரங்களை பிரதிபலிக்க வேண்டும்.
திறமையான நீதித்துறை நிர்வாகத்திற்கு இந்த விக்கிரவாண்டி நீதிமன்ற வளாகம் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக அமைய வேண்டும்.
வழக்கறிஞர்கள் சமூகம்தான் நீதித்துறையின் ஆற்றல் மையமாகும். சுதந்திரமான நீதித்துறைக்கு வலிமையான, அறிவுசார் மற்றும் அறநெறி சார்ந்த வழக்கறிஞர்கள் சமூகம் இன்றிமையாதது ஆகும்.
மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் சிறந்து விளங்க வேண்டும். அதே சமயம் நீதிமன்ற அதிகாரிகளாக உங்களின் கடமைகளை செய்வதில் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும். இந்த புதிய கட்டடம், விரைவான நீதி விசாரணை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைய வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நீதித்துறை முன்பை விட பிரகாசமாக திகழவும், துணிச்சலோடும், உறுதியோடும் செயல்பட நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு நீதிபதி சுஷ்ருத்அரவிந்த் தர்மாதிகாரி பேசினார்.
