/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 31, 2024 12:50 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆக., 7ல் தேரோட்டம் நடக்கிறது.
வைணவ தலங்களில் 108ல் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடக்கும். நேற்று காலை கொடிபட்டம் மாட, ரத வீதிகள் சுற்றி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கின்றன. ஐந்தாம் திருநாளான ஆக., 3 காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவையும் நடக்கின்றன.
ஏழாம் திருநாளான ஆக., 5 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள், ரெங்க மன்னார் சயன சேவையும், ஒன்பதாம் திருநாளான ஆக., 7 காலை 9:05 மணிக்கு தேராட்டமும், 12ம் திருநாளான ஆக., 10 மாலை 6:00 மணிக்கு புஷ்பயாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
கொடி பட்டம் சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை, 8:10 மணிக்கு கொடியேற்ற பட்டர்கள் தயாராக இருந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. 8:32 மணிக்கு கொடி பட்டம் ஏற்றப்பட்டது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
செயல் அலுவலர் லட்சுமணன் கூறுகையில், ''8:30 மணிக்கு தான் கொடி பட்டம் ஏற்றப்படும் என பட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.
விழாவில் சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள், ராம்கோ நிறுவன நிர்வாகிகள் நிர்மலா வெங்கட்ராமராஜா, ஸ்ரீ கண்டன் ராஜா, அறங்காவலர் நளாயினி, இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் லட்சுமணன், கோவில் பட்டர்கள் பங்கேற்றனர்.

