* குடியிருப்போர் குரல் . . .சேதமான ரோடு ,கழிவு நீர் கலந்த குடிநீர், வாறுகால் இல்லை:அவதியில் நாகலிங்க நகர் குடியிருப்போர்
* குடியிருப்போர் குரல் . . .சேதமான ரோடு ,கழிவு நீர் கலந்த குடிநீர், வாறுகால் இல்லை:அவதியில் நாகலிங்க நகர் குடியிருப்போர்
ADDED : ஜூலை 01, 2026 03:14 AM

அருப்புக்கோட்டை:சேதமான ரோடு ,கழிவு நீர் கலந்த குடிநீர், வாறுகால் இல்லை , தெரு விளக்கு பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி அருப்புக்கோட்டை அருகே நாகலிங்க நகர் குடியிருப்புவாசிகள் தவிக்கின்றனர்.
நாகலிங்க நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளில் தலைவர் கணேசன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கார்த்திகேயன், உதவி செயலர் முனீஸ்வரி, உபதலைவர் மணிகண்டன் , உறுப்பினர்கள் துர்கா தேவி, பாலு, சுந்தரம் ஆகியோர் கூறியதாவது : அருப்புக்கோட்டை நகராட்சி 17 வது வார்டை சேர்ந்தது நாகலிங்க நகர் பகுதி. இதில், எஸ்.ஆர்., தெரு, நட்டார் தெரு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
நட்டார் தெருவில் வாறுகால் இல்லை. ரோடு பல பகுதிகளில் மேடும், பள்ளமுமாக உள்ளது, களிமண் தரையாக இருப்பதால் கனரக வாகனங்கள் வந்தால் ரோட்டில் பதிந்து பள்ளமாகிவிடுகிறது. தரமான ரோடு இந்த பகுதியில் அமைக்கப்பட வேண்டும். முக்கியமாக நகராட்சி குடிநீர் சுழற்சி முறையில் விடப்படுகிறது. இந்த குடிநீரை நம்பித்தான் இப்பகுதி மக்கள் உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலந்து வருவதால் கருப்பு கலரில் உள்ளது. பலமுறை நகராட்சிக்கு தகவல் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. தனியார் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். ரோடு மோசமான நிலையில் இருப்பதால் தனியார் குடிநீர் லாரிகள் இந்த பகுதிக்கு வருவது இல்லை. பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பல பகுதிகளில் தோண்டப்பட்டு மக்கள் விழுந்து செல்லும் நிலையில் உள்ளனர். பணிகள் முடிந்தவுடன் ரோட்டை சமன் செய்வது இல்லை.
நகராட்சி தூய்மை பணியாளர்கள் எங்கள் பகுதிக்கு குப்பை வாங்க வருவது இல்லை. ரோட்டின் சந்திப்பு பகுதியில் தான் குப்பையில் கொட்டப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. குப்பை வரி, குடிநீர் கட்டணம் என, அகராதிக்கு தேவையான வரிகளை செலுத்தியும் பயன் இல்லை. தெருவிளக்கு கூடுதலாக அமைக்கப்பட வேண்டும். புதியதாக போடப்பட்ட மின் கம்பத்தில் விளக்குகள் பொருத்த வேண்டும். மழை காலமானால் அனைத்து தெருக்களும் சேறும், சகதியுமாக ஆகிவிடுகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டி உள்ளது. டூவீலர்களில் கூட செல்ல முடியாது. ரோடு இல்லாத தெருக்களில் தரமான கனமான ரோடு அமைக்க வேண்டும். என, கூறினர்.
