கால்நடைகள் கணக்கெடுப்பு விபரம் வெளியிடுவதில் தாமதம் திட்டங்களை அறிவிக்க முடியாத நிலை
கால்நடைகள் கணக்கெடுப்பு விபரம் வெளியிடுவதில் தாமதம் திட்டங்களை அறிவிக்க முடியாத நிலை
ADDED : ஜூலை 03, 2026 06:53 AM
விருதுநகர்: -: தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு 2024 அக். 25ல் துவங்கி கடந்தாண்டு மே மாதத்தில் முடிவடைந்தது. ஓராண்டாகியும் கால்நடைகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியிடப்படாததால் புதிய திட்டங்களை புதிதாக அமைந்துள்ள மாநில அரசுகளால் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் 2024 அக்.25ல் ரூ.200 கோடி செலவில் துவங்கப்பட்டது. இந்த பணியில் கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை மருத்துவர்கள் உட்பட ஒரு லட்சம் கள அலுவலர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் 2025 பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் வட மாநிலங்களில் டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே திட்டமிட்டப்படி பிப்ரவரியில் பணிகளை முடிக்க முடியாமல் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
பணிகள் முடிந்து விபரங்கள் சரிபார்ப்பு மே மாதம் இறுதியில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து ஓராண்டு நிறைவடைந்தும் சரிபார்ப்பு என்ற பெயரில் இதுவரை கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனால் பல மாநிலங்களில் தேர்தல் முடிந்து புதிய அரசுகள் அமைந்தும் புதிதாக திட்டங்களை அறிவிக்க முடியாமல் 20வது கால்நடை கணக்கெடுப்பின் விபரங்களை வைத்து வழக்கமான தடுப்பூசி முகாம்களை மட்டும் செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கால்நடை வளர்ப்போருக்கான புதிய திட்டங்கள், நாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கான நிவாரணம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிவிக்க முடியாத நிலை தொடர்கிறது.
எனவே மத்திய அரசு தாமதிக்காமல் 21வது தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
