அரிசி, எண்ணெய் விலை உயர்வால் குடும்ப செலவுகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
அரிசி, எண்ணெய் விலை உயர்வால் குடும்ப செலவுகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
UPDATED : அக் 31, 2026 11:12 PM
ADDED : அக் 31, 2026 05:24 PM

விருதுநகர்: ‛அரிசி, எண்ணெய் ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பால், பண்டிகை நேரத்தில் குடும்பங்களின் செலவுகள் அதிகரித்து பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.', என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தி.மு.க., வடக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் த.வெ.க., அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகரச்செயலாளர் தனபாலன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது:
பெண்கள், குழந்தைகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்து முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தார்.
ஆனால் தற்போது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை. 5 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் கோரிக்கைகளையும், அவர்களின் குரலையும் தமிழக அரசும், முதல்வரும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. சிறைச்சாலையை உடைத்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. பசும்பொன் போன்ற இடங்களுக்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் அரசு தவறியது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கு போட்டியாக மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளனர், என்றார்.
