கருவேலம் ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் பாழ்: காரியாபட்டி எஸ்.தோப்பூர் விவசாயிகள் வேதனை
கருவேலம் ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் பாழ்: காரியாபட்டி எஸ்.தோப்பூர் விவசாயிகள் வேதனை
UPDATED : ஜூலை 01, 2026 08:49 PM
ADDED : ஜூலை 01, 2026 08:00 PM
காரியாபட்டி: ஒரு புறம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் பாழாகி வருகிறது. மறுபுறம் காரியாபட்டி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வரத்து ஓடை வழியாக கண்மாயில் கலந்து விளைநிலங்களில் பாய்ந்து மண்வளம் கெட்டு பாழாகியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காரியாபட்டி எஸ்.தோப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 452 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
4 மடைகள் உள்ளன . 3 கி. மீ., சுற்றளவில் கண்மாய் விரிந்து உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
குண்டாற்றிலிருந்து வரும் நீர் தெற்காறு வழியாக பிரிந்து, வரத்து கால்வாய் வழியாக நீர் ஆதாரம் கிடைத்தது. ஒரு முறை நிரம்பினால் இருப்போகம் விவசாயம் செய்தனர். நாளடைவில் நீர்வரத்து இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வறண்டன. போதிய நீர் ஆதாரம் இல்லாததால் விளை நிலங்கள் தரிசாக போடப்பட்டன.
தற்போது எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய், வயல்கள் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளன. கண்மாய் நிரம்பி 15 ஆண்டுகள் ஆகின. காரியாபட்டியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்ததால் மண்வளம் கெட்டு கண்மாய், வயல்கள் பாழாகின. போதிய நீர் வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு தரிசுகளாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
