பசுமை போர்வை போர்த்திய ரோட்டோர மரங்கள் :பயணிகளை பரவசப்படுத்தும் இயற்கை எழில்
பசுமை போர்வை போர்த்திய ரோட்டோர மரங்கள் :பயணிகளை பரவசப்படுத்தும் இயற்கை எழில்
UPDATED : ஜூலை 05, 2026 06:00 PM
ADDED : ஜூலை 05, 2026 05:40 PM

காரியாபட்டி: காரியாபட்டி மாந்தோப்பு ரோட்டில் அச்சங்குளம் பிசிண்டி வரை இருபுறமும் செழித்து வளர்ந்துள்ள மரங்களால் பசுமை போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
அந்த ரோட்டில் பயணிக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள், இயற்கை ஆர்வலர்கள் என அனைவரின் கவனத்தையும் பசுமை அழகு ஈர்த்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் வரிசையாக வளர்ந்துள்ள வாகை, புங்கன், பூவரசு, கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரங்கள், கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிர்ச்சியான சூழலை உருவாக்குகின்றன.
காலை நேரத்தில் பனித்துளிகளால் நனைந்த இலைகளும், மாலை நேரத்தில் சூரிய ஒளி கிளைகளின் வழியாகப் பரவுவதும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
தென்றல் காற்றில் அசையும் மரக்கிளைகள், பறவைகளின் கீச்சொலி ஆகியவை அந்தப் பகுதியை இயற்கை பூங்காவாக மாற்றியுள்ளன. அந்த வழியாக பயணம் செய்யும் பலர் வாகனங்களை மெதுவாக இயக்கி, சில நிமிடங்கள் நின்று இயற்கை அழகை ரசித்துச் செல்கின்றனர். இது 100 நாள் வேலைத்திட்ட பெண்களால் சாத்தியமானது.
கண்ணும் கருத்துமாக வளர்த்த இந்த மரங்கள், நிழல் தருவதோடு மட்டுமல்லாமல், வெப்பத்தைத் தணித்து காற்றை சுத்தப்படுத்துகின்றன. மழைப்பொழிவுக்கும், இயற்கை சமநிலைக்கும் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதுபோன்ற பசுமைகளை பாதுகாப்பது காலத்தின் அவசியம். ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளின் போது தேவையின்றி மரங்களை அகற்றாமல், மாற்று ஏற்பாடுகளுடன் பாதுகாக்க வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் அப்பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தால், வருங்கால தலைமுறைக்கும் இயற்கையின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதே யதார்த்தமான உண்மை.
இளைப்பாறுவதே புண்ணியம்
தமிழரசி, குடும்பத் தலைவி:
100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும் அச்சங்குளத்தில் இருந்து பிசிண்டி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்தது, மனதிற்கு திருப்தியாக உள்ளது. நன்கு வளர்ந்து நிழல் தரும் போது அதில் எத்தனையோ பேர் இளைப்பாறி செல்லும் போது அதைவிட புண்ணியம் வேறு என்ன இருக்கிறது. மரக்கன்றுகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நட்டு வளர்த்து வருகிறோம்.
கண்ணும் கருத்துமாக பராமரிப்பு
உஷாராணி, குடும்பத் தலைவி:
மரக்கன்றுகளை நட்டு வளர்க்க படாத பாடுபட்டோம். ஆடு மாடுகள் கடிக்காத படி பாதுகாக்க வேலி அமைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மழை சரிவர இருக்காது. கன்றுகள் வாடாதபடியிருக்க நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து ஊற்றி வந்தோம். நன்கு வளர்ந்து பசுமையாக இருப்பதை காணும்போது மனதிற்கு இதமாக உள்ளது. அந்த வழியாக போவோர் வருவோர் இயற்கையான சூழலை ரசித்துச் செல்லும் போது பெருமையாக உள்ளது.
