/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து பகுதியாக மாறிய பட்டேல் ரோடு அச்சத்துடன் கடக்கும் மக்கள்
/
வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து பகுதியாக மாறிய பட்டேல் ரோடு அச்சத்துடன் கடக்கும் மக்கள்
வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து பகுதியாக மாறிய பட்டேல் ரோடு அச்சத்துடன் கடக்கும் மக்கள்
வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து பகுதியாக மாறிய பட்டேல் ரோடு அச்சத்துடன் கடக்கும் மக்கள்
ADDED : டிச 07, 2025 08:34 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் பட்டேல் ரோடு முழுவதும் சேதமாகி பள்ளங்களாக மாறி பல மாதங்களாகிறது. மழை பெய்தால் பள்ளங்களில் சேறும் சகதியுமாகி வாகன ஓட்டிகள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் நடந்து செல்லும் போது அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்காகவும், அப்பகுதியில் உள்ள ஆலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றி செல்வதற்காகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், மத்திய சேமிப்பு கோடவுனுக்கு ரயிலில் வரும் சரக்குகளை கொண்டு வருவதற்காகவும் பட்டேல் ரோடு அமைக்கப்பட்டது.
கனரக வாகனங்கள் சிரமமின்றி வந்து செல்ல வேண்டும் என்பதால் மற்ற ரோடுகளை விட அகலமானதாக அமைக்கப்பட்டது. ஆனால் ரோடு அமைத்த நாள் முதல் முறையாக பராமரிக்கப்படவில்லை.
மேலும் நகராட்சி ரோடாக இருந்தும் சிறு பள்ளங்கள் ஏற்படும் போதும் கூட சீரமைப்பு பணிகள் எதுவும் செய்யப்படவில்லை.
இதனால் ஏற்பட்ட சிறு பள்ளங்கள் தற்போது பெரும் பள்ளங்களாக மாறி ரோடு முழுவதும் நிறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் பள்ளங்கள் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
வாறுகால் அமைக்கும் பணிகளுக்காக மண்ணை ரோட்டில் கொட்டி வைத்து இருப்பதால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. இதனால் ஆலைகளில் இருந்து உற்பத்தி பொருட்களை வெளியே எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள், பெரியவர்களை வெளியே டூவீலரில் அழைத்து செல்லும் போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது தொடர் கதையாக மாறியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தால் முறையாக அமைக்கப்படாத பாதாளச்சாக்கடை திட்டத்தால் ஒவ்வொரு முறையும் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. பள்ளங்களில் கழிவு நீர், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தினமும் அவ்வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
பள்ளங்களை கடந்து செல்வதால் விபத்து, முதுகு வலி உள்பட பல்வேறு பாதிப்புக்கு வாகன ஓட்டிகள் ஆளாகி வருகின்றனர். இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களில் அப்பகுதியினர் மண்ணை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்து பயன்படுத்தி வந்தாலும், நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகள் செய்வதற்கு தயாராக இல்லை.
நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைப்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியில்லாத நகராட்சி என அனைத்து மக்களும் குற்றம்சாட்டும் நிலைக்கு உருவாகியுள்ளது.

