நிதி ஒதுக்கியும் துவங்காத வாறுகால் பணி அதிருப்தியில் பள்ளபட்டி மீரா காலனி மக்கள்
நிதி ஒதுக்கியும் துவங்காத வாறுகால் பணி அதிருப்தியில் பள்ளபட்டி மீரா காலனி மக்கள்
ADDED : செப் 01, 2026 07:02 PM

சிவகாசி, செப். 2 -
சிவகாசி அருகே பள்ளபட்டி மீரா காலனியில் வாறுகால், தடுப்புச் சுவர் அமைக்க ரூ. 21 லட்சம் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி மீரா காலனியில் செங்கமலப்பட்டி செல்லும் ரோட்டில் ஓடை உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஓடையில் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதுடன் முட்புதர்களும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் நடமாடுகின்றது. குறுகிய ரோட்டின் ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனைத் தொடர்ந்து 2014 –- 15 நிதியாண்டில் ஓடையில் காங்கிரீட் தளம் அமைத்து தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. இதனால் தற்போது வரையிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு ஓடையை துார்வாரி காங்கிரீட் தளம் அமைத்து தடுப்புச் சுவர் அமைப்பதற்காக ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே விரைவில் பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
