/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலரில் அழைத்து செல்லப்படும் கைதிகள்
/
டூவீலரில் அழைத்து செல்லப்படும் கைதிகள்
ADDED : டிச 02, 2025 06:14 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பிடிபடும் கைதிகள், நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் டூவீலரில் அழைத்து செல்லப்படுவதால் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே, கைதிகளை அழைத்துச் செல்ல போலீஸ் ஸ்டேஷன்களில் வாகன வசதி செய்து தர மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சப் டிவிஷன்களில் சட்டம் ஒழுங்கு, கிரைம், மகளிர், போக்குவரத்து, மதுவிலக்கு ,டிராபிக் என பல போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இப்போலீஸ் ஸ்டேஷன்களில் தினமும் அடிதடி, குட்கா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகளில் தினமும் பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லபடுகின்றனர்.
இதற்காக கைதிகளை அழைத்துச் செல்ல ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் போதிய வாகன வசதிகள் இல்லாததால், டூவீலரில் அழைத்து செல்லப்படுகின்றனர். இதில் டூவீலரை ஒரு போலீசார் ஓட்ட, நடுவில் கைதியை உட்கார வைத்து, அவருக்கு பின்னர் மற்றொரு போலீஸ்காரர் உட்கார்ந்து கொள்ள, ஒரே டூவீலரில் 3 பேர் பயணிக்கின்றனர்.
இவ்வாறு அழைத்து செல்லும் போது, விபத்து அபாயமோ, கைதி தப்பும் முயற்சியோ நடக்க வாய்ப்புள்ளது. அல்லது எதிரில் வாகனங்கள் வரும்போது கைதி, ஏதாவது விபத்தை உருவாக்க முயற்சி செய்தால், போலீஸ்காரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, போலீசாரின் பாதுகாப்பு கருதி, கைதிகளை அழைத்துச் செல்ல ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வாகன வசதி செய்து தர மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் நடவடிக்கை உடனடி அவசியமாகும்.

