/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளத்தில் மிதக்கும் புதுக்கடை பஜார்
/
வெள்ளத்தில் மிதக்கும் புதுக்கடை பஜார்
ADDED : டிச 07, 2025 08:35 AM

அருப்புக்கோட்டை: சிறு சாரல் மழைக்கே அருப்புக்கோட்டை புதுக்கடை பஜார் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை புதுக்கடை பஜார் நகரின் முக்கிய பகுதி. இதில் பூக்கடைகள், பலசரக்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மருந்து கடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட கடைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் பள்ளிகளுக்கு செல்வர்.
முக்கியமான இந்த ரோடு பல ஆண்டுகளாக சிறிய மழை பெய்தால் கூட வெள்ளத்தில் மிதக்கிறது. ரோட்டின் இருபுறம் உள்ள வாறுகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டுவதாலும் அடைப்புகள் ஏற்பட்டு மழை நீர் செல்ல முடியாமல் ரோட்டிலேயே தேங்கி வெள்ள காடாக உள்ளது.
நகராட்சி மூலம் ரோட்டின் இருபுறம் உள்ள வாறுகால்கள் ரூ.55 லட்சம் நிதியில் புதியதாக அமைக்கப்பட்டது. சீராக அமைக்காததால் கழிவு நீரும் மழை நீரும் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. கடமைக்கு நகராட்சி வாறுகாலை அமைத்து தங்கள் பணியை முடித்துக் கொண்டனர். லட்சக்கணக்கில் செலவழித்தும் பயனில்லை.
நேற்று முன்தினம் மாலை பெய்த மழையில் பழையபடி பஜார் வெள்ளத்தில் மிதந்தது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்களும் வியாபாரிகளும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கோடிகளை கொட்டி நகராட்சி வாறுகாலை கட்டுவதற்கு நிதியை வீணடிப்பதை விட்டுவிட்டு, மழைக்காலத்தில் மட்டும் படகு சவாரி விடலாம் என நொந்து போய் கூறுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் ஆண்டு கணக்கில் இருக்கும் இந்த பிரச்சனையை முறையாக ஆய்வு செய்து மழை நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

