/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் காவு வாங்க காத்திருக்கும் தாறுமாறு ரோடுகள்; மழைக்காலத்தில் துவங்கிய பணிகளால் மக்கள் விரக்தி தகுதியற்றதாக மாறுதா மாவட்ட தலைநகர்
/
விருதுநகரில் காவு வாங்க காத்திருக்கும் தாறுமாறு ரோடுகள்; மழைக்காலத்தில் துவங்கிய பணிகளால் மக்கள் விரக்தி தகுதியற்றதாக மாறுதா மாவட்ட தலைநகர்
விருதுநகரில் காவு வாங்க காத்திருக்கும் தாறுமாறு ரோடுகள்; மழைக்காலத்தில் துவங்கிய பணிகளால் மக்கள் விரக்தி தகுதியற்றதாக மாறுதா மாவட்ட தலைநகர்
விருதுநகரில் காவு வாங்க காத்திருக்கும் தாறுமாறு ரோடுகள்; மழைக்காலத்தில் துவங்கிய பணிகளால் மக்கள் விரக்தி தகுதியற்றதாக மாறுதா மாவட்ட தலைநகர்
ADDED : டிச 02, 2025 05:08 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் தாறுமாறு ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. மழைக்காலத்தில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் எம்.ஜி.ஆர்., சாலை பணிகளால் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதுடன், கிடங்கு போல் அலங்கோலமாய் மாறி விட்டன.
வாகன ஓட்டிகள், பயணிப்போருக்கு முதுகு வலியை ஏற்படுத்துகிறது. நகருக்குள் நுழையும் முக்கிய ரோடான இது டெண்டர் விட்டு பணி ஆணை வழங்கி ஆறு மாதம் கழித்து தான் பணிகளை துவக்கி உள்ளனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியற்ற இந்த விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த மாதவன் உள்ளார். புது பஸ் ஸ்டாண்டை திறக்க முந்தைய கலெக்டர் ஜெயசீலன் நடவடிக்கை எடுத்த போதே, நான்கு வழிச்சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு முக்கிய வழித்தடமாக உள்ள எம்.ஜி.ஆர்., சாலையை விரிவுப்படுத்தி, சென்டர் மீடியன் வைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அடுத்த நிதிக்குழுமத்தை கணக்கில் கொண்டு திட்ட வரைவு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 2025 ஜூன் மாதம் ரூ.1 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் முதல் நாள் விரிவாக்கத்திற்காக ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்தி விட்டு பின் அப்படியே விட்டு விட்டனர். கிட்டதட்ட 5 மாதங்கள் கழித்து நவ. ல் தான் சென்டர் மீடியன் கட்டும் பணி செய்தனர். இன்னும் முடியவில்லை.
அதே போல் ரோடு இருபுறமும் தோண்டி போட்ட நிலையில் அருப்புக்கோட்டை ரோடு பணியில் மீந்த கட்டுமான கழிவான கிராவலை போட்டு நிரப்பி உள்ளனர். இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கில் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதால் ரோடு மேலும் மோசமானது. இரவில் வெளிச்சம் வேறு இல்லை. இந்த வழியாக வரும் வாகனங்கள் சகதியில் டயர் சிக்கி படாதபாடு படுகின்றனர். இவ்வழியாக நகராட்சி தலைவரோ அல்லது விருதுநகர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வோ சென்றால் தான் மக்களின் வலி புரியும் என்கின்றனர் மக்கள்.
பணிக்கு நிதி ஒதுக்கி ஆறு மாதம் கழித்து பணியை துவக்கியதில் தான் இந்த சிக்கலே உள்ளது. மேலும் நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைபாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதை மாற்றி விட்டு வாகன ஓட்டிகளை அல்லல் படுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஒரு பக்கம் சோதித்தால், நெடுஞ்சாலைத்துறை மறு பக்கம் மக்களை படுத்துகிறது.
பலர் இது மாவட்ட தலைநகருக்கு தகுதி இல்லாத நகராட்சி என குற்றம் சாட்டும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எம்.ஜி.ஆர்., சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் தாமதம் ஆனால் நிச்சயம் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்.
சகதிக்குள் தள்ளாடும் வாகனங்கள்
தினசரி ஏதாவது ஒரு கார், லாரியாவது சகதியில் சிக்கி விடும். மேடும், பள்ளமுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டை தவிர்க்கின்றனர். ஆனால் இது தான் நகரில் இருந்து நான்கு வழிச்சாலையை அடைய முக்கிய ரோடு. முதல் பணியாக சென்டர் மீடியன் வேறு அமைத்து விட்டதால் வாகனங்கள் சகதிக்குள் தள்ளாடுகின்றன.
- கணேசன், பஞ்சர் தொழில், விருதுநகர்.
கடும் தவிப்பில் மக்கள்
சேறும் சகதியுமாக இருப்பதுடன் எதிர்பாரத மேடு, பள்ளங்கள் குழி கிடங்குகள் போல் காணப்படுகின்றன. இந்த ஊர் பற்றி தெரியாமல் இரவில் விருதுநகருக்கு வர வேண்டும் என நினைத்து யாராவது எம்.ஜி.ஆர்., சாலை வந்தால் சிரமம் தான். இந்த ரோடு பணிகளை மழைக்கு முன்பே துவங்கி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சென்டர் மீடியன் வேறு ரோடு பணிக்கு முன்பே அமைத்து விட்டதால் வாகனங்கள் கடும் சிரமத்தில் தவிக்கின்றன.
- பிரபாகரன், கூலித்தொழிலாளி, விருதுநகர்.
விரைவுபடுத்த அறிவுறுத்தல்
45 செ.மீ.,ல் இருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு ரோடு போட மறு திட்ட வரைவு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதலுக்கு காத்திருந்ததால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நேரம் என்பதால் தாமதம் ஆகிறது. விரைந்து ரோடு போட அறிவுறுத்தப்படும்.
- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.எல்.ஏ., விருதுநகர்.
மூன்று நாட்களில்
மின்கம்பம் ஊன்றிய பிறகு மூன்று நாட்களில் ரோடு போடும் பணி நடக்கும்.
- ஆர்.மாதவன், நகராட்சி சேர்மன், விருதுநகர்.

