3ம் பாலினத்தவருக்கு கழிப்பறை அரசு பதில் அளிக்க உத்தரவு
3ம் பாலினத்தவருக்கு கழிப்பறை அரசு பதில் அளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 26, 2024 08:12 PM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், 22,364 பேர் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் இல்லை. இது, அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகும்.
கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், ஒருவர் செல்லும் வகையில், பாலின சார்பற்ற கழிப்பறைகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தமிழகத்தில் பொது இடங்களில், ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பாலின சார்பற்ற கழிப்பறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், பாலின சார்பற்ற கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. எதிர்காலத்தில் படிப்படியாக பாலின சார்பற்ற கழிப்பறைகள் கட்டப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பஸ் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில், மூன்றாம் பாலினத்தவருக்கு கழிப்பறைகள் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக, அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

