பண அரசியல் என்ற பேயை ஓட்டும் மக்கள் கோவையில் அண்ணாமலை ஆவேச பேட்டி
பண அரசியல் என்ற பேயை ஓட்டும் மக்கள் கோவையில் அண்ணாமலை ஆவேச பேட்டி
ADDED : ஏப் 11, 2024 10:58 PM
கோவை:''தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக. கோவையில் பண அரசியல் என்ற பேயை மக்கள் ஒட்ட வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர்,'' என்று கோவை தொகுதி பா.ஜ., தொகுதி வேட்பாளர் அண்ணாமலை கூறினார். கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
பிரதமர் ரோடு ஷோ போவதை விமர்சிக்கிறார் பழனிசாமி. அவர் ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள்? அவரை பார்க்க யாரும் தயாராக இல்லை; வரவும் மாட்டார்கள்.
அதனால் மக்களை அழைத்துக் சென்று பட்டியில் அடைத்து வைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள்.பிரதமர் மக்களை பார்க்க வருகிறார். மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள்.
இது ஜனநாயக நாடு 'ரோடு ஷோவை' மக்கள் தரிசன யாத்திரை என்று நாங்கள் சொல்கிறோம். அமைச்சர் ராஜாவின் அப்பா சமூக விரோதி. கோபாலபுர ஊழல் குடும்பம், 2024 தேர்தலுக்கு பின் சிறைக்குச் செல்லும்.
இதை மோடி கியாரண்டியாகக் கொடுத்திருக்கிறார். தி.மு.க., கட்டமைத்துள்ள பிம்பம் தேர்தலுக்கு பின் உடையும்.
உதயநிதி பிரசாரத்தின்போது ஒரு குழந்தைக்கு 'ரோலக்ஸ்' என பெயர் சூட்டி உள்ளார். விக்ரம் படத்தில் வரும் வில்லன் பெயர்தான் ரோலக்ஸ்.
கோவையில் ரொக்கம், மூக்குத்தி, தோடு போன்றவற்றை வாக்காளர்களுக்கு கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதுகுறித்து எங்களது கட்சி தேர்தல் குழு சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்படும்.
நம்பிச் சென்ற பன்னீர்செல்வத்தை ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட வைத்து நடுரோட்டில் நிறுத்தியதாக பா.ஜ., மீது புகார் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.
பன்னீர்செல்வம், சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற உள்ளார். அவருக்கு பா.ஜ., துணை நிற்கிறது.
ஆனால், தென்சென்னையில் இரட்டை இலை சின்னம் துணையோடு, மகனை நிறுத்தியிருக்கும் ஜெயகுமார், அங்கே சுயேச்சையாக மகனை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பாரா? அப்படி செய்தால், ஜெயகுமார் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

