சட்டம் -- ஒழுங்கை காப்பதில் சிறப்பு கவனம்: அரசு தகவல்
சட்டம் -- ஒழுங்கை காப்பதில் சிறப்பு கவனம்: அரசு தகவல்
ADDED : ஜூலை 26, 2024 01:02 AM
சென்னை:'சட்டம் - ஒழுங்கை தொடர்ந்து காப்பதில், திராவிட மாடல் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல், அரசு துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். சட்டம் - ஒழுங்கை சிறப்பாக பராமரித்து, தமிழகத்திற்கு புகழ் சேர்த்து வருகிறார்.
சிறைகள்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருப்பதால், தமிழகம் தொழில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகள் மேம்பாட்டில், மனித வளர்ச்சி குறியீட்டில் முன்னணி மாநிலமாக உள்ளது.
சட்டம் - ஒழுங்கை தொடர்ந்து காப்பதில், திராவிட மாடல் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகம் கூடும் அனைத்து விழாக்களையும், அமைதியான முறையில் நடத்திக் காட்டி உள்ளது.
இது, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை, சிறப்பாக பராமரிக்கப்படுவதன் அடையாளம்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் வழியாக, 481.92 கோடி ரூபாயில் 2,882 காவல் துறை வாடகை குடியிருப்புகள்; 42.88 கோடி ரூபாயில் 42 போலீஸ் நிலையங்கள்; 84.53 கோடி ரூபாய் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சிறைகளில் உள்ள நுாலகங்கள், 2.80 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு நன்கொடையாக சேகரிக்கப்பட்டன. முதல்வர், 1,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
தீயணைப்புத் துறை
தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக்காக, 55.62 கோடி ரூபாய் செலவில் தலைக் கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1,850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள்.
பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3,500 மீட்பு உடைகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பு ஊர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான் நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய ஊர்தி.
ஏழு அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, ஒரு நுரை நகர்வு ஊர்தி, 50 'ட்ரோன்'கள், நான்கு புகை வெளியேற்றும் கருவி, நான்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

