பயன்படாத குளங்கள் பராமரிப்பு; நகராட்சி நிர்வாக துறை ஏற்கிறது
பயன்படாத குளங்கள் பராமரிப்பு; நகராட்சி நிர்வாக துறை ஏற்கிறது
ADDED : ஜூன் 26, 2024 07:20 AM
சென்னை : “நகரப்பகுதிகளில் பாசனத்திற்கு பயன்படாத குளங்களை பராமரிக்கும் பொறுப்பை, நகராட்சி நிர்வாகத்துறையிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்,” என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: தாமிரபரணி ஆற்றை துார் வார வேண்டும். சிற்றாறில் தடுப்பணை கட்டி தர வேண்டும். நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு, அனுமன் நதியில் சேருகிறது. பொதுப்பணித்துறை கால்வாய்களில், டாஸ்மாக் பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்றி, கால்வாய்களை துார் வார வேண்டும்.
மணிமுத்தாறு, பாபநாசம் தண்ணீர் திறப்பில் சில பாகுபாடு உள்ளது. விவசாயிகளை அழைத்து பேசி, அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சியில், 35 பொதுப்பணித்துறை குளங்கள் உள்ளன. இவற்றில் பாசன வசதி கிடையாது. சுற்றிலும் வீடுகளாகி விட்டன. அந்த குளங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. அதை நகராட்சி நிர்வாகத்துறை எடுத்து துார் வாரினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
அமைச்சர் நேரு: முதல்வரிடம் பேசி, நீர்வளத்துறை அமைச்சரை அழைத்து முடிவு எடுக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள குளங்களை ஒப்படைக்காவிட்டால், பராமரிக்கும் பொறுப்பையாவது பெற முடிவு செய்துள்ளோம்.
சபாநாயகர்: நீர்வளத்துறை அமைச்சர் பெருந்தன்மையாக தருகிறாராம்.
அமைச்சர் நேரு: அவர் தர மாட்டார். பராமரிக்கும் பொறுப்பை கொடுத்தால் போதும்.
அமைச்சர் துரைமுருகன்: பாசனத்திற்கு பயன்படாத குளங்களை, நாங்கள் கட்டிக்காப்பது சிரமம். தேவையில்லாத வேலை. அந்த குளங்களை பராமரிக்கும் பொறுப்பை, நகராட்சி நிர்வாகத்துறையிடம் வழங்க தயாராக உள்ளோம்.
நேரு: அமைச்சர் கூறியது குறித்து, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

