வீட்டுவசதி சங்க சொத்துக்களை ஏலம் விடுவதில் முறைகேடு?
வீட்டுவசதி சங்க சொத்துக்களை ஏலம் விடுவதில் முறைகேடு?
UPDATED : ஜூலை 26, 2024 03:43 AM
ADDED : ஜூலை 26, 2024 01:13 AM

சென்னை: மதுரை மண்டலத்தில், வீட்டுவசதி சங்க சொத்துக்களை ஏலம் விடுவதில், முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்பட்ட புகார் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது.
தமிழகத்தில், 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இதில், நலிவடைந்த சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுளளது.
இவற்றை மீட்கும் நடவடிக்கையாக, அந்தந்த சங்கத்தில் பயன்படுத்தாத சொத்துக்களை விற்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில், இ - -ஏலம் வாயிலாக சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், மதுரை மண்டலத்தில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் உள்ள சில அதிகாரிகள், முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மதுரை, விருதுநகர் மண்டல கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் சங்கம், பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளது. அதில், 'சார்- - -பதிவாளர் நிலையில் உள்ள சில அதிகாரிகள், இ- - ஏலம் நடைமுறையை தவறாகப் பயன்படுத்தி, சொத்து விற்பனையில் முறைகேடு செய்கின்றனர். சங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் குறைந்த விலைக்கு சொத்துக்கள் முறைகேடாக விற்கப்படுகின்றன. பதவிக்காலம் முடிந்த அதிகாரிகளை மாற்றாததே, இதற்குக் காரணம்' என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டுவசதித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

