'மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான ஆய்வறிக்கையை தமிழக அரசு தரவில்லை' பார்லிமென்டில் மத்திய அரசு பதில்
'மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான ஆய்வறிக்கையை தமிழக அரசு தரவில்லை' பார்லிமென்டில் மத்திய அரசு பதில்
ADDED : ஜூலை 25, 2024 11:37 PM
ஒருங்கிணைந்த இயக்க அறிக்கை மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகியவை இல்லாமல், வெறுமனே திட்ட அறிக்கையை மட்டும், தமிழக அரசு தயார் செய்து அனுப்பி உள்ளது. இதன் காரணமாகவே, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம் ஏற்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி கேட்டிருந்த கேள்விக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டொக்கான் சாஹு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
மெட்ரோ ரயில் கொள்கை என்று ஒன்று உள்ளது. இந்த கொள்கையின் படி, எந்த ஒரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்கப்பட வேண்டுமென்றாலும், குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, திட்டமிடப்படும் வழித்தடத்தை ஒட்டி அமைந்த, வேறுசில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்த இயக்க திட்டமான சி.எம்.பி.,(காம்ப்ரஹென்சிவ் மொபிலிடி பிளான்)யும்அளிக்க வேண்டும்.
இன்னொன்று, அந்த குறிப்பிட்ட வழித்தடம் பொருத்தமாக இல்லை என்றாலோ அல்லது பல்வேறு காரணங்களால் அது கைவிடப்படும் சூழ்நிலை உருவானாலோ, அதற்கு மாற்றாக வேறொரு புதிய வழித்தடத்திற்கு ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, இந்த இரண்டு அறிக்கைகளையும் மெட்ரோ ரயில் கொாள்கையின்படி மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ, விரிவான திட்ட அறிக்கை மட்டும்தான் சமர்ப்பித்துள்ளது. அதன் காரணமாகவே, மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு திட்டத்தை கேட்டுப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும். ஆனால், ஒரு திட்டத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு முறையான வழிமுறைகளைக் கூட கடைபிடிக்காமல், மத்திய அரசுக்கு அறிக்கையை தமிழக அரசு சமர்பித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
- நமது டில்லி நிருபர் -

