ADDED : ஆக 26, 2024 04:23 AM
சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் 20 பேர், அமைச்சர் மகேஷ் தலைமையில் ஹாங்காங் சுற்றுலா சென்றுள்ளனர்.
பள்ளி அளவில், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உலக அளவில், தேசிய அளவில், மாநில அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு, அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சிறப்பிடம் பெற்றவர்களில், 20 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவர், அலுவலர் ஒருவர், கடந்த 22ம் தேதி அமைச்சர் மகேஷ் தலைமையில் ஹாங்காங் சென்றனர். அங்குள்ள டிஸ்னி பூங்காவுக்கு, நேற்று முன்தினம் அழைத்து செல்லப்பட்டனர்.
மாணவர்கள் குதுாகலத்துடன் சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் சுற்றுலா முடிந்து வரும், 27ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளனர்.

