தாது மணல் அள்ளிய நிறுவனங்களால் அரசுக்கு ரூ.5,882 கோடி இழப்பு கோவில் நிலத்தில் ரூ.1,000 கோடிக்கு ராயல்டி கேட்கும் பக்தர்கள்
தாது மணல் அள்ளிய நிறுவனங்களால் அரசுக்கு ரூ.5,882 கோடி இழப்பு கோவில் நிலத்தில் ரூ.1,000 கோடிக்கு ராயல்டி கேட்கும் பக்தர்கள்
ADDED : பிப் 26, 2025 12:55 AM

'கோவில் நிலத்தில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் தாது மணல் கொள்ளை நடந்துள்ள நிலையில், அதற்கான ராயல்டி தொகையை கோவில் நிர்வாகத்திடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ்
மேலும், மூன்று மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய நிறுவனங்களால் அரசுக்கு, 5,882 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அந்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்ய அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். துாத்துக்குடி மாவட்டத்தில், 2,002 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, கண்டறியப்பட்டுள்ளது.
வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 913 கோடி; டி.வி.எல்., இண்டஸ்டிரியல் நிறுவனம் 276 கோடி; டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் நிறுவனம் 196 கோடி; பீச் மினரல்ஸ் நிறுவனம் 425 கோடி; ஓசியன் கார்னெட் சாண்ட்ஸ் நிறுவனம் 191 கோடி ரூபாய், என ராயல்டி தொகையாக அரசுக்கு வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, கலெக்டர் இளம்பகவத் 10ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பஞ்சாயத்து குண்டல் காரி சாஸ்தா காருடையார் கோவிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் இருந்து பல லட்சம் டன் தாதுமணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி
அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட அந்த தாது மணலில் இருந்து கார்னெட், தோரியம் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கண்ணதாசன் என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின், அரசியல் அழுத்தத்தால் வழக்கை திரும்பப் பெற்றார்.
தாதுமணல் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க, நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது. கோவில் நிலத்தில் அனுமதியின்றி தாதுமணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
அரசுக்கு 5,882 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், 1,000 கோடி ரூபாயை, காரி சாஸ்தா கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அந்த கோவிலை சுற்றி உள்ள நிலங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்னெட், தோரியம் போன்ற தாதுக்களை ஏற்றுமதி செய்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

