டி.எம்.எஸ்., வளாகம் முற்றுகை மருத்துவ பணியாளர்கள் கைது
டி.எம்.எஸ்., வளாகம் முற்றுகை மருத்துவ பணியாளர்கள் கைது
ADDED : ஜூலை 31, 2024 01:15 AM

சென்னை:ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.எம்.எஸ்., வளாகத்தை முற்றுகையிட முயன்ற, 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட ஊழியர்களை, சென்னைக்கு வரும் வழியிலேயே போலீசார் தடுத்து கைது செய்தனர்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ், 13,000 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு, இரண்டு மணி நேரம் பணி எனக்கூறி, 8 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்ற வலியுறுத்துகின்றனர். மேலும், குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.
எனவே, ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களை தேடி மருத்துவப் பணியாளர்கள், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தை முற்றுகையிட நேற்று வந்தனர்.
அவர்களை வரும் வழியில் அந்தந்த மாவட்டங்களிலேயே, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்திற்கு அருகே வந்த, 10 மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது மண்டபத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து, மக்களை தேடி மருத்துவம் பணியாளர் யுவப்பிரியா கூறியதாவது:
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் முதலில், 2 மணி நேரம் எனக்கூறி விட்டு, 8 மணி நேரம் வரை பணியாற்ற நிர்பந்திக்கின்றனர். அதற்கு, மாத ஊதியம் 5,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
தினமும், 5 முதல் 7 கி.மீ., வரை பயணித்து, 10 முதல் 20 பேர் வரை பரிசோதித்து, மருந்து, மாத்திரை வழங்குகிறோம். நாங்கள் பெறும் ஊதியம், போக்குவரத்து செலவுக்கே போதுமானதாக இல்லை.
எனவே, 10,000 ரூபாயாக மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணி நேரத்தை வரன்முறைப்படுத்துவதுடன், பணி நிரந்தரம் செய்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பலன்களும், போக்குவரத்து படி, மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற வசதிகளும் வழங்க வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பேறுகாலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் அளித்து விட்டு, அடையாளப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தோம்.
அதற்கு எங்களை அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

