ADDED : பிப் 27, 2025 11:30 PM
சென்னை:தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மனித சக்தியை வீணடிக்கும் வகையில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார், தபால் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
காகிதமில்லா அரசு நிர்வாகம் என்ற இலக்குடன், எல்லா துறைகளும், 'டிஜிட்டல்' மயமாகி வருகின்றன; விரைவாக தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
அதற்கான சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம், அசுர வளர்ச்சியை எட்டிவிட்ட நிலையில், காவல் துறையில், மன்னர் காலத்தில் புறாக்களின் காலில் கட்டி தபால் அனுப்பியது போன்ற நடைமுறை நீடிக்கிறது.
காவல் துறையில், டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும், 1,300க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவு களும் செயல்பட்டு வருகின்றன.
காவல் நிலையங்கள், கமிஷனர், இணை, துணை, உதவி கமிஷனர் அலுவலகங்கள், சிறப்பு பிரிவு அலுவலங்கள் தோறும் தபால் எடுத்துச் செல்லும் பணிக்கு, ஒரு போலீஸ்காரர் வீதம், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில், கமிஷனர், இணை, துணை, உதவி கமிஷனர் அலுவலகங்கள் அருகருகே இருந்தாலும், தபால் எடுத்துச் செல்ல வேண்டும்.
அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் தபால் சேர்க்கும்போது, அங்குள்ள பதிவேட்டில், 'பேட்ஜ்' எண்கள், நேரம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தபால் எடுத்துச் செல்லும் இடத்தில் உள்ள முகாம் அலுவலக ஊழியர் முத்திரையிட்டு, அந்த கடிதத்திற்கு எண்கள் பதிவு செய்து, அதன் பின்னரே கொடுத்து அனுப்புவர்.
இப்பணிகள் நடந்து முடியவே, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடும். தபால் கொண்டு சேர்க்கும் இடத்தில், அதை பெற்றுக் கொள்ளும் ஊழியர் குறித்த நேரத்தில் இருக்கவும் மாட்டார். அங்கே காத்துக் கிடந்து தபால்களை ஒப்படைக்க வேண்டும்.
மாவட்டங்களில் தபால் எடுத்துச் செல்வது பெரும் அலைச்சலாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து, தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு பஸ்சில் தபால் எடுத்துச் சென்ற பெண் போலீசை, நள்ளிரவில் நீடாமங்கலத்தில் இறங்கச் சொல்லி, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவமும் நடந்துள்ளது.
புயல், மழை காலங்களில் மின் இணைப்பு இல்லை; இணைய சேவை துண்டிக்கப்பட்டு விட்டது என்ற சூழல் ஏற்படும் போதும், ரகசிய தகவல்கள் பரிமாற்றத்திற்கும் மட்டுமே, தபால் எடுத்துச் செல்ல போலீசாரை பயன்படுத்த வேண்டும்.
மற்ற நாட்களில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

