'சைபர்' குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 29 தமிழர்கள் வெளிநாடுகளில் மீட்பு
'சைபர்' குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 29 தமிழர்கள் வெளிநாடுகளில் மீட்பு
ADDED : டிச 07, 2025 01:57 AM

சென்னை: தாய்லாந்து - மியான்மர் எல்லையில், சர்வதேச சைபர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட, 29 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
தாய்லாந்து - மியான்மர் நாடுகளின் எல்லை பகுதி, சர்வதேச சைபர் மோசடி புகழிடமாக இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு, அதிக சம்பளம் என்ற ஆசை காட்டி அழைத்துச் சென்று, அங்கு பணய கைதியாக்கி, சைபர் மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த கும்பலின் மிரட்டல், அடி, உதைக்கு பயந்து பலர், சைபர் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, மியான்மர் பாதுகாப்பு படை போலீசார், சைபர் மோசடி மையங்களில் திடீர் சோதனை நடத்தி, அவர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரை மீட்டு, சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து சென்று, அக்கும்பலிடம் சிக்கியவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் ப்ளூ டிரயாங்கிள்' என்ற பெயரில், தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 465 பேர் மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக, 395 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில், 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. வேலைக்காக அழைத்துச் சென்று, நாடு திரும்பாதவர்கள் என, தெரிய வந்துள்ளது.

