ADDED : மார் 17, 2024 03:54 AM
சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தின் பேரில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.
அடகு வைத்து ஓராண்டு மேல் அசல், வட்டி செலுத்தாத நகைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படியும், வட்டி செலுத்தவில்லை எனில், அந்த நகைகள் ஏலம் விடப்படும்.
அவ்வாறு ஏலம் விடப்படும் போது, சிலர் வேண்டுமென்றே குறைந்த தொகைக்கு ஏலம் விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், நகைகள் ஏலம் விடப்பட்டதில், நகை கடனுக்கான தொகையை விட குறைந்த தொகை ஏலத்தில் பெறுவதால், சங்கங்களுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில் நகை ஏல தேதியன்று, சந்தை மதிப்பிற்கு, 85 சதவீதம் குறைவில்லாமல் ஏலம் நடந்து, அதன் பிறகும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.

