விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம்: மேற்பார்வை பொறியாளருக்கு அதிகாரம்
விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம்: மேற்பார்வை பொறியாளருக்கு அதிகாரம்
ADDED : டிச 02, 2025 04:57 AM
சென்னை: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்பு பெற்றிருக்கும் நபர் இறந்து விட்டால், சட்டப்பூர்வ வாரிசுக்கு பெயர் மாற்றி தருவதற்கான அதிகாரம், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாய பிரிவுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தவும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
கடந்த, 2021 - 22ல் துவக்கப்பட்ட அத்திட்டத்தில் விவசாய குழுக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஒரு மின் இணைப்புக்கு மானியமாக ஆண்டுக்கு, ஒரு குதிரை திறனுக்கு, 3,805 ரூபாயை மின் வாரியத்திற்கு அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தில், மின் இணைப்பு பெயர் பெற்றிருப்பவர் உயிரிழந்து விட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரருக்கு பெயர் மாற்றப்படுகிறது.
இதற்கு, வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்த பின், சென்னை தலைமை அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு, மின் இணைப்பு பெயர் மாற்றி தரப்படுகிறது. இதனால், அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
தற்போது, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றி தருவதற்கு, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கி, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

