ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்; விற்பனையை தடுக்க மத்திய அரசு முடிவு
ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்; விற்பனையை தடுக்க மத்திய அரசு முடிவு
ADDED : ஜூலை 07, 2026 11:47 PM

சென்னை: ஒரே பிராண்ட் பெயரில், வெவ்வேறு மூலக்கூறுகளை வைத்து தயாரிக்கப்பட்ட மருந்துகள், விற்பனை செய்யப்படுவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதால், இதற்கு தீர்வு காண, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம், மக்களிடம் கருத்து கேட்கிறது.
சில மருந்து நிறுவனங்கள், வெவ்வேறு நோய்களுக்கு தயாரிக்கும் மருந்துகள், ஒரே பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
உதாரணமாக ஜீரண மண்டல பாதிப்புகளில், அமில சுரப்பு, இரைப்பை புண், பாக்டீரியா தொற்று என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு, முன்னணி நிறுவனங்கள், ஒரே பெயரில் மருந்துகளை தயாரிக்கின்றன.
அவற்றை வேறுபடுத்தி காண்பிக்க, பொதுவான பெயரின் பின்னால், சில எழுத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரே பெயரில், வெவ்வேறு நோய்களுக்கான மருந்துகள் விற்கப்படுவது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரம் குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட அறிக்கை:
ஒரே 'பிராண்ட்' பெயரில் பல மருந்து தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
வெவ்வேறு வீரியமிக்க மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு, ஒரே 'பிராண்ட்' பெயரை பயன்படுத்துவது, நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும். இதற்கு தீர்வு காண, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள், enforcecell.div@cdsco.nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாக, வரும் 17ம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
