பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதுாறு வழக்கு
பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதுாறு வழக்கு
ADDED : மார் 15, 2024 12:56 AM
சென்னை:போதிய ஆதாரங்கள் இல்லாமல், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னை பற்றி அவதுாறு கருத்து தெரிவித்ததாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக அவதுாறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, முதல்வர் ஸ்டாலினை தொடர்புபடுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியிருந்தார்.
இதேபோல, இவ்விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அதில், அண்ணாமலையும், முதல்வர் ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக, அவதுாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் அகற்ற தேவையான நடவடிக்கையை, முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். மேலும், தமிழக போலீசாரின் கடும் நடவடிக்கையால், கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் தமிழகத்தில் 10,665 போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய, 14, 934 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான நபர்களில், 19 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். போலீசார், 28,383 கிலோ கஞ்சா, 63,448 போதை மாத்திரைகள் மற்றும் 98 கிலோ இதர போதைப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின், 4,994 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன; 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் பேசியுள்ளனர். எனவே, போதிய ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்த, அவர்கள் மீது கிரிமினல் அவதுாறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் எண்ணிடப்பட்டு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
குரலை முடக்கும்முயற்சி வெற்றிபெறாது'
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக்கின் கும்பல் பிடிபட்டு, ஒரு மாதம் ஆகிறது.பிரதமர் மோடி, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.ஆனால், இதுகுறித்து ஒரு வார்த்தை கூட, இதுவரை முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அதிகரித்து விட்டது என்ற உண்மையை கூறியதற்காக, என் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தினசரி செய்திகளை படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதல்வரே? மக்களுக்கு தி.மு.க., ஆட்சியின் அவலம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, அவதுாறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து, மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்தி கொண்டு தான் இருப்போம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அண்ணாமலை
:தமிழக பா.ஜ., தலைவர்
*'வழக்கை சந்திக்க தயார்'
அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தி.மு.க., அரசை பொறுத்தவரை, வழக்கு தொடர்வது எப்போதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், பொதுச்செயலர் பழனிசாமி மீது, முதல்வர் அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதை எதிர்கொள்வோம். முதல்வர், கனிமொழி, உதயநிதி, டி.ஜி.பி., ஆகியோர் ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என, பழனிசாமி கூறினார். இது தவறா. எத்தனை வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.மடியில் கனம் இல்லை என்றால், முதல்வர் விளக்கம் அளித்திருப்பார். மடியில் கனம் இருப்பதால், விளக்கம் அளிக்க முடியவில்லை. ஜாபர் சாதிக்குடன் தொடர்பிருந்து, அதன் வழியே பலன் பெற்றவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள கைது செய்யப்பட்டு, முகத்தை மூடி அழைத்து செல்லும் காட்சிகள், விரைவில் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

