உலக முருகன் மாநாடு நடத்த ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
உலக முருகன் மாநாடு நடத்த ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
ADDED : மார் 17, 2024 06:47 AM
சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்பட உள்ள, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடிற்கான சிறப்பு பணி செய்ய, 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.
முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் இந்த ஆண்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பிப்., 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாநாட்டை சிறப்பாக நடத்த, 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குழு அமைக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனர் அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, துறை அமைச்சர் தலைமையில், 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ளது. துறை செயலர் துணை தலைவராகவும், கமிஷனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்களாக சிறப்பு பணி அலுவலர், கூடுதல் கமிஷனர், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்; சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்; மயிலம் பொம்மபுர ஆதீனம், ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள்; சத்தியவேல் முருகனார்.
ஆன்மிக பேச்சாளர்கள் சு.கி.சிவம்; மங்கையர்க்கரசி; பேச்சாளர் ராமசுப்பிரமணியன்; கோவை தரணிபதி ராஜ்குமார்; ஹிந்து சமய அறநிலையலத்துறை கூடுதல் ஆணையர்கள் மூன்று பேர், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், திண்டுக்கல் இணை ஆணையர், கோவில் இணை ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை, அறநிலையத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

