கூட்டணியில் நீடிக்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் நிபந்தனை! ஆட்சியில் பங்கு அல்லது 5 ராஜ்யசபா எம்.பி.
கூட்டணியில் நீடிக்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் நிபந்தனை! ஆட்சியில் பங்கு அல்லது 5 ராஜ்யசபா எம்.பி.
ADDED : டிச 07, 2025 04:41 AM

சென்னை: 'ஆட்சியில் பங்கு தர வேண்டும்; இல்லையெனில், 5 ராஜ்யசபா எம்.பி. பதவி தர வேண்டும்' என்று காங்கிரஸ் மேலிடம் விதித்துள்ள நிபந்தனையால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், ராஜ்யசபாவில் அதிக எம்.பி.க்கள் உள்ள கட்சியாக இருந்தது. இதனால், பார்லிமென்டில் மத்திய அரசுக்கு சுலபமாக இடைஞ்சல் உண்டாக்க முடிந்தது.
ஆனால், இப்போது கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
இதனால் 245 எம்.பி.க்களை கொண்ட ராஜ்யசபாவில், காங்கிரசுக்கு 27 பேர்தான் உள்ளனர். அதை அதிகரிக்க, பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருகிறது.
நீண்டகாலமாக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வென்று தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. 2006ல் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரசின் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை.
அடுத்த ஆண்டு தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு தராது என காங்கிரசுக்கு தெரியும். இதனால், 'லோக்சபா தேர்தலில், நான்கில் ஒரு பங்கு தொகுதியை, அதாவது 39க்கு 9 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினீர்கள்.
அதுபோல, ராஜ்யசபாவிலும் நான்கில் ஒரு பங்கு, அதாவது 18க்கு நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை தர வேண்டும்' என, நிபந்தனை விதித்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க. மேலிடம், அது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் விடுவதாக இல்லை. தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஒரு பக்கம் த.வெ.க.வுடனும் பேச்சு நடத்த துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தவிர, காங்கிரசுக்கு மாற்று இல்லை. இப்போது, த.வெ.க. இருக்கிறது. இது தி.மு.க.,வுக்கும் தெரியும். அதனால் தான், எங்கள் ஐவர் குழுவை ஸ்டாலினே சந்தித்தார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம், வாரிய தலைவர் பதவிகள் உள்ளிட்ட நியமன பதவிகளில், நான்கில் ஒரு பங்கு வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். இந்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மட்டுமே, கூட்டணி தொடரும் என்பதில் மேலிடம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் இந்த எதிர்பாராத கோரிக்கைகளால், தொகுதி பங்கீடு பேச்சில் தி.மு.க. தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் ஒப்புக் கொள்கின்றனர்.

