திமிங்கல எலும்புடன் 'வீடியோ': இளைஞர்கள் பதிவால் சர்ச்சை
திமிங்கல எலும்புடன் 'வீடியோ': இளைஞர்கள் பதிவால் சர்ச்சை
ADDED : நவ 14, 2025 11:33 PM

திமிங்கலத்தின் எலும்பை கையில் வைத்தபடி, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இளைஞர்கள் வீடியோ பதிவேற்றம் செய்திருப்பது, சர்ச்சையையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கலம் உள்ளது. கடலில் இருந்து திமிங்கலத்தை பிடித்து, விற்பனை செய்வதும், அதன் உடல் பாகங்களை மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதும் சட்டப்படி குற்றமாகும். திமிங்கலத்தின் எலும்புகளை வீட்டில் வைத்திருக்க, யாருக்கும் அனுமதி கிடையாது.
தகவல் கூற வேண்டும் திமிங்கலம் இயற்கையாக இறந்து கரை ஒதுங்கினால், அரசு மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவை பொதுவாக அருங்காட்சியகம் அல்லது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தமிழக வனத்துறை சட்டப்படி, திமிங்கலத்தின் எலும்புகளை, தனிநபர் வீட்டில் வைத்திருக்க அனுமதி கிடையாது.
இந்நிலையில், மாமல்லபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், திமிங்கலத்தின் எலும்புடன், 'வீடியோ' ஒன்றை, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கருத்து சொல்லுங்க அந்த வீடியோ பதிவில் பேசியுள்ள இளைஞர், 'மாமல்லபுரம் பகுதிக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. திமிங்கலத்தின் எலும்பு, எவ்வளவு பெரிதாக உள்ளது.
'இதை வைத்து நான் எந்த சம்பவமும் பண்ணப்போவது கிடையாது. இதை பார்த்திருந்தால் கருத்து தெரிவியுங்கள். என் நண்பன், எனக்கு அன்பளிப்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பு தந்தது' என, தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவில் உள்ள திமிங்கலத்தின் எலும்புகளை பார்க்கும்போது, அவை சட்டவிரோதமாக வேட்டையாடி கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -

