திருமண மண்டபங்கள், மால்களுக்கும் சர்வீஸ் சாலையை கட்டாயமாக்க முடிவு
திருமண மண்டபங்கள், மால்களுக்கும் சர்வீஸ் சாலையை கட்டாயமாக்க முடிவு
ADDED : டிச 08, 2025 02:49 AM

சென்னை: பள்ளி வளாகங்களுக்கு விதிக்கப்பட்டது போல, தியேட்டர்களுடன் கூடிய மால்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கும், 7 மீட்டர் அகல சர்வீஸ் சாலை கட்டுப்பாடு வர உள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை ஒட்டி, ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவ, மாணவியர் வந்து செல்லும், காலை, மாலை நேரங்களில், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சொந்த செலவு பள்ளிகள் துவங்கும், முடியும் நேரங்களில், நெடுஞ்சாலைகளை கடந்து செல்ல முடியாமல் மக்களும் தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக, சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, பள்ளி வளாகங்கள் அமைந்துள்ள பகுதியில், நெடுஞ்சாலைக்கு வெளியில், 7 மீட்டர் அதாவது, 22 அடி அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைப்பது கட்டாயமாகும்.
நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தடை படாமல், பள்ளி வாகனங்கள் ஓரமாக நின்று செல்ல இச்சாலை உதவும்.
அந்தந்த பள்ளி நிர்வாகமே, தங்கள் சொந்தச் செலவில், நிலம் கொடுத்து சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை, வேறு சில கட்டடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் வல்லுநர் பி.பாலமுருகன் கூறியதாவ து:
பள்ளிகள் உள்ள பகுதியில், 22 அடி அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்கும் கட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசலை தடுக்க உதவும். இது, மிகவும் நல்ல நடவடிக்கையாகும்.
சென்னை மட்டுமல்லாது, பல்வேறு நகரங்களிலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, பெரிய அளவில் திருமண மண்டபங்களும், தியேட்டர்களுடன் கூடிய மால்களும் கட்டப்படுகின்றன.
இவற்றுக்குள் குறிப்பிட்ட நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் உள்ளே செல்வதும், வெளியேறுவதும் நடக்கிறது. அந்த சமயத்தில், சம்பந்தப்பட்ட பகுதியில், நெடுஞ்சாலைகளை கடக்க முடியாமல், பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
காத்திருக்கிறோம் பள்ளி வளாகங்கள் போல, திருமண மண்டபங்கள், மால்கள் போன்றவற்றுக்கும், சர்வீஸ் சாலை கட்டுப்பாடு வந்தால், நெரிசல் பிரச்னை தீரும். தமிழக அரசு இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் என காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளை தொடர்ந்து, மால்கள், திருமண மண்டபங்கள் உள்ள பகுதிகளிலும், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டிய தேவை எழுந்து ள்ளது.
'இதற்கான உத்தரவில், மால்கள், மண்டபங்களை சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

