தொகுதி மக்களை கேட்டு தான் 18 எம்.எல்.ஏ.,க்களை பழனிசாமி நீக்கினாரா; தினகரன் பதிலுக்கு கேட்கிறார்
தொகுதி மக்களை கேட்டு தான் 18 எம்.எல்.ஏ.,க்களை பழனிசாமி நீக்கினாரா; தினகரன் பதிலுக்கு கேட்கிறார்
ADDED : டிச 02, 2025 04:49 AM

திருமங்கலம்: கோபிசெட்டிபாளையத்தில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில், 'தொகுதி மக்களை கேட்டுதான் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தாரா' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியதற்கு, மதுரை திருமங்கலத்தில் பேட்டி அளித்த அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், '18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களை கேட்டுத்தான் பழனிசாமி நீக்கினாரா' என பதிலுக்கு கேட்டார்.
நேற்று அவர் கூறியதாவது: கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. உறுதியானதும் தெரிவிக்கிறேன். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017ல் இருந்து தற்போது வரை பழனிசாமி செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.
2017ல் தி.மு.க., கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராக்கியவர்கள் 18 எம்.எல்.ஏ.,க்கள். இவரது அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. அவர்களை தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டுதான் செய்தாரா.
கட்சியில் எம்.ஜி.ஆர்., கொண்டுவந்த சட்ட விதிகளை தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு தனக்கு சாதகமாக மாற்றினார். அ.தி.மு.க., தொண்டர்களை கேட்டுத்தான் மாற்றினாரா.
இன்றைக்கு அ.தி.மு.க., கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறி, பணத்திமிரில் இருக்கும் பழனிசாமிக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என்றார்.
அ.ம.மு.க.,வை தவிர்த்து ஆட்சி அமைக்க முடியாது மதுரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைந்தால் கடும் போட்டி இருக்கும். ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். த.வெ.க.,வில் நிறைய இளைஞர்கள் கூட்டம் வருவதை பார்க்கும் போது வாய்ப்பு இருக்கும் என்று நடைமுறையை தான் கூறுகிறேன். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் எந்தக் காலத்திலும் இணக்கமாக செல்ல மாட்டேன். தி.மு.க., வை எதிர்க்கும் அளவிற்கு இரட்டை இலை வலிமையுடன் இல்லாததற்கு பழனிசாமி தான் காரணம். அ.ம.மு.க., வை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

