தமிழகத்திற்கு திமுக அரசு வைத்துள்ள கடன் ரூ.13.18 லட்சம் கோடி!
தமிழகத்திற்கு திமுக அரசு வைத்துள்ள கடன் ரூ.13.18 லட்சம் கோடி!
UPDATED : ஜூன் 17, 2026 12:06 AM
ADDED : ஜூன் 16, 2026 11:46 PM

சென்னை: தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை, சென்னையில் நேற்று, விஜய் அரசு வெளியிட்டது. தமிழகத்திற்கு முந்தைய தி.மு.க., அரசு வைத்து சென்றுள்ள கடன் சுமை, 13.18 லட்சம் கோடி ரூபாய் என்றும், வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய் என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
'தமிழக அரசின் பொது நிதி நிலை குறித்த ஓர் ஆய்வு: 2021 - 22 முதல் 2025 - 26 வரை' என்ற வெள்ளை அறிக்கையை, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

மாநில அரசின் பட்ஜெட் ஆவணங்கள், ரிசர்வ் வங்கி, மத்திய தணிக்கை அறிக்கை ஆகியவற்றில் உள்ள விபரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதை, எந்த அரசியல் கட்சியும் மறுக்க முடியாது. கொரோனா தொற்றுக்கு பின், நாட்டின் அனைத்து மாநிலங்களும், தொடக்க நிலையில் இருந்து பயணத்தை தொடங்கின.
எனவே, 2021 முதல் 2026 வரையிலான கால கட்டத்தில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற ஒருமித்த தொழில் துறை அமைப்பும், பொருளாதார அளவும் உடைய மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு என்ன வெனில், அந்த மாநிலங்கள் மீட்சி காலத்தை பயன்படுத்தி, தங்களின் நிதி பற்றாக்குறைகளை கட்டுப்படுத்தி குறைத்தது தான். ஆனால், தமிழகம் அதற்கு நேர்மறையாக செயல்பட்டது.
கடந்த, 2021 முதல் 2026 வரை, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 78,324 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; இது, இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். சொந்த வரி வசூல், 5.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது,இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவு. மூலதன செலவும், 1.44 சதவீதமாக குறைந்துள்ளது.
அரசு பணியாளர் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டாய செலவுகள், 64.4 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது, மேற்கண்ட மாநிலங்களை விட மிகவும் அதிகம். தமிழக அரசின் கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த, 2021 மார்ச் இறுதியில், 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், 2025 - 26ல், 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 4.87 லட்சம் கோடி ரூபாய் கடன் கூடுதலாக சேர்ந்துள்ளது. அந்த கடனானது கடந்த, 60 ஆண்டுகளில் சேர்ந்த ஒட்டுமொத்த கடன் அளவை விட, மிக அதிகமானது. ஒவ்வொரு ஒரு ரூபாய் வருவாயிலும், 22.80 காசு வட்டிக்காக செலவிடப்படுகிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், மாநிலத்தின் உண்மையான மொத்த கடன், 13.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக, 14.30 சதவீதம் கடன் வளர்ந்து உள்ளது. ஆனால், மூலதன முதலீடு வெறும், 8.30 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அல்ல, அன்றாட கடன்களை சமாளிக்க கடன் வாங்குகிறோம் என்பது தெளிவான சான்று. ஒவ்வொரு நபர் மீதும் உள்ள கடன், 1.28 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தையும், ஒரு ரூபாய் கூட பொருளாதாரத்திற்கு பங்கு அளிக்கும் முன்பே, இந்த கடன் சுமையுடன் பிறக்கிறது.
கடன் வாங்கும் அளவு குஜராத், 17.6 சதவீதம், மஹாராஷ்டிரா 19.7 சதவீதம், கர்நாடகா, 23.40 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 28.30 சதவீதமாக அதிகமாக உள்ளது. தமிழக அரசின் வட்டி செலவு, 67,050 கோடி ரூபாயாக உயர்ந்து. மாநிலத்தின் மொத்த மூலதன திட்டமான, 50,911 கோடி ரூபாயை மிஞ்சியுள்ளது.
எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வட்டி செலுத்த, 1.32 ரூபாய் செலவாகிறது.
குஜராத் மாநிலம், வருவாய் உபரியுடன் செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா வருவாய் செலவு கணக்கில், சமநிலையை பேணுகின்றன. தமிழகம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் சென்று விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
சொந்த வரி வருவாய்
கடந்த, 2021 - 22ல், 5.93 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய், 2025 -
26ல், 5.45 சதவீதமாக குறைந்துள்ளது. வணிக வரி துறையில் நிலவும் ஊழல்
காரணமாக கணிசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சந்தை நிலவரத்தை பின்பற்றும்
வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை. சொத்து பதிவில் இழக்கும்
வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி
மதிப்பில் முத்திரைத்தாள் வருவாய் விகிதம் சரிவு பாதையில் உள்ளது.
ஆயத்தீர்வை வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.
அதிக கனிம வள ஆதாரங்களை
கொண்டிருந்த போதும், அந்த துறை வாயிலாக பெறப்படும் வருவாய் பெரிய அளவில்
மாற்றமின்றி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப்பகிர்வு
குறைந்துள்ளது.
எப்படி சரிசெய்வது
ஊழலற்ற நிர்வாகத்தின் வாயிலாக வருவாய் இழப்புகளை சரிசெய்தல், அரசு
கொள்முதலின் செலவை குறைத்தல், பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம், தற்போதுள்ள
அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல், செலவு தரம், நேர்மையான,
நம்பகமான வரவு செலவு திட்டமிடல் ஆகியவற்றின் வாயிலாக நிதிநிலைமை சரிசெய்ய
அரசு முடிவு செய்துள்ளது.
முதியோர் வளர்ச்சி
தமிழகம், முதியோர் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் மாநிலமாக உள்ளது. கடந்த,
2011ல் முதியோர்களின் பங்கு, 10.60 சதவீதத்தில் இருந்து, 2031ல் 18.20
சதவீதமாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவிலேயே
அதிக அளவாக, 71.70 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.
கலைஞர் உரிமை தொகை
கலைஞர் உரிமைத் தொகை திட்டம், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, இலவச பஸ்,
உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம், மேம்படுத்தப்பட்ட சமூக
பாதுகாப்பு ஆகியவற்றுக்கு, 2025 - 26ல், ஆண்டு தொடர் செலவு, 25,000 கோடி
ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்கு இணையாக எவ்வித வருவாய் பெருக்க
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், இத்திட்டங்கள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன.
