மதுரையின் வளர்ச்சியைக் கெடுக்கும் தி.மு.க.,வின் சூழ்ச்சி அரசியல்: பா.ஜ.,
மதுரையின் வளர்ச்சியைக் கெடுக்கும் தி.மு.க.,வின் சூழ்ச்சி அரசியல்: பா.ஜ.,
ADDED : டிச 07, 2025 02:39 PM

சென்னை: தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஓட்டு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் சதி செய்து தடுத்து, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட, மதவெறி தி.மு.க அரசு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், மத வெறியோடு தி.மு.க அரசு நடத்தும் சூழ்ச்சி அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, சிறுபான்மை மக்களை மனம் குளிரச் செய்து விட்டோம் என்று கொக்கரித்து, சிறுபான்மை ஓட்டு வங்கியை வருகின்ற தேர்தலில் பெற்று விட வேண்டும் என்ற வெறியுடன், அதிகார ஆணவ திமிருடன், சட்டத்தை மதிக்காத காவல்துறையின் கருப்பு ஆடுகளை தூண்டி விட்டு, மக்கள் விரோத தி.மு.க. அரசு செய்த பாவச் செயலுக்கு தமிழக மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.
மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், சட்டத்திற்குப் புறம்பாக பொய்யாக உயர்நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றத்தில் மனுதாரர்கள் சார்பாக 10 பேர் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றமே மத்தியக் காவல் படையை அனுப்பியும், திருப்பரங்குன்றம் முருகன் குன்றின் மேல் கார்த்திகை தீபத்தை ஏற்றவே விடமாட்டோம் என்று திட்டமிட்டு சதி செய்து, சட்டத்தை மீறி நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, மிகப்பெரிய அராஜகத்தை தமிழக அரசு செய்தது மன்னிக்க முடியாதது.
திருப்பரங்குன்றம் முருகனின் ஆலயத்தில் உள்ள புனித தீபத் தூணுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட எல்லை கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல், திருப்பரங்குன்ற வரலாறு புரியாமல், எல்லை மீறிய பயங்கரவாத, மதவாத, பிரிவினைவாத சொற்களை பயன்படுத்தி திமுக எம்.பி., கனிமொழி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, அநீதி இழைத்த தி.மு.க அரசின் இந்து விரோதப் போக்கை, பிரிவினைவாத, மதவெறி செயலை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் துணிந்து கண்டித்து, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

