ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்தார்
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்தார்
ADDED : டிச 07, 2025 02:05 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் நேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தங்கத்தேர் செய்யும் பணி, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் முயற்சியால், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையினரால் தங்கத்தேர் செய்யும் பணி துவக்கப்பட்டது.
இதில், மரம் மற்றும் தங்க வேலைப்பாடு என, 40க்கும் மேற்பட்ட சிற்பிகள், பொற்கொல்லர்கள் மூலம், 1,600 கன அடி பர்மா தேக்கு மரத்தில், 25 அடி உயரம், 10 அடி அகலம், 13 அடி நீளத்தில், ஐந்து அடுக்குகளுடன் பிரம்மா தேரை ஓட்டுவது போல மரத்தேர் வடிவமைக்கப்பட்டது.
மரத்தேரின் மீது, 2 டன் தாமிர தகடு பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன.
தங்கத்தேரில் எட்டு கந்தர்வர்கள், 16 நந்தி சிலைகள், நான்கு குதிரைகள், நான்கு மூலைகளிலும் நான்கு சாமரப் பெண்கள் உள்ளிட்டவை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 6:00 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மதியம் 1:15 மணிக்கு தங்கத்தேர் வெள்ளோட்டம் துவங்கியது; காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப்பின், பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்துச் சென்றனர். வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் மலர் துாவியும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் தங்கத் தேரை வரவேற்றனர்.
சங்கர மடத்தின் சமய, சமுதாய பண் பாட்டு சேவை அமைப்பான ஹிந்து சமய மன்றம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து துவங்கிய தங்கத்தேரின் வெள்ளோட்டம், வேளிங்கப்பட்டரை, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி, நெல்லுக்காரத் தெரு, மேற்கு ராஜ வீதி, சங்கர மடம் வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத் தேர் வந்தடைந்தது.

