உள்ளாட்சிகளிடம் ஓ.எஸ்.ஆர்., நிலத்தை ஒப்படைப்பதில் விலக்கு
உள்ளாட்சிகளிடம் ஓ.எஸ்.ஆர்., நிலத்தை ஒப்படைப்பதில் விலக்கு
ADDED : ஜூலை 07, 2026 11:47 PM

சென்னை: தமிழகத்தில் தொழில் மனைப்பிரிவுகள், தொழிற்பேட்டைகளில், ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதில் விலக்கு அளித்து, தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, மனைப்பிரிவுகள் உருவாக்கும்போது, அதில், 5 சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதில் தொழில்மனை பிரிவுகள், தொழிற்பேட்டைகளில், 5 சதவீதம் என்பது, 0.5 சதவீதமாக குறைத்து சலுகை வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை, உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.
இந்நிலையில், தொழில்மனை பிரிவுகளில், தொழிற்பேட்டைகளில், இதுபோன்ற ஓ.எஸ்.ஆர்., நிலங்களை பெறும் உள்ளாட்சி அமைப்புகள், அதை மேம்படுத்துவதில்லை என புகார்கள் வந்தன.
இந்நிலையில், இதுபோன்ற ஓ.எஸ்.ஆர்., நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்காமல், தாங்களே பூங்காவாக மேம்படுத்த, தொழில் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரின. இந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், தொழில்மனை பிரிவுகள் மற்றும் தொழிற்பேட்டைகளில், ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டு நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பதில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலங்களை ஒப்படைக்காமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே, அதை பூங்காவாக பராமரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது.
