8 கிலோ தங்கம் திருட்டு: டாக்டர் மீது மாமனார் புகார்
8 கிலோ தங்கம் திருட்டு: டாக்டர் மீது மாமனார் புகார்
ADDED : ஜூலை 06, 2026 07:47 AM
கோவை: மாமனாரின் வீட்டில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக, டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், கணபதி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான எஸ். சண்முகபாண்டியன் (67). இவர் தனது மருமகன் தனது வீட்டில் இருந்த 1,000 பவுன் தங்கத்தைத் திருடியதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தத் திருட்டில் மருமகனின் தாயார் மற்றும் சகோதரிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
போலீஸார் தெரிவித்துள்ள தகவலின்படி, சண்முகபாண்டியனின் மகளுக்கு பிப்ரவரி 2024ல் டாக்டர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. மகள்- மருமகன் குடும்பத்தினரை, காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சண்முக பாண்டியன் தங்க வைத்தார்.
தனது மருமகன் மீது நம்பிக்கை வைத்து, தனது லாக்கரின் சாவியையும் அவரிடம் ஒப்படைத்தார். வீட்டின் உரிமையை தனக்கு மாற்றித் தருமாறு மருமகன் வற்புறுத்திய நிலையில், இரு குடும்பத்தினருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டது.
பிறகு டிசம்பர் 2025ல் சண்முகபாண்டியன் அந்தச் சொத்தை மூன்றாம் நபர் ஒருவருக்கு ரூ.15 கோடிக்கு விற்றார். மருமகன் குடும்பத்தினர் திடீரென வீட்டை காலி செய்து விட்டு வெளியேறினர். ஏதோ முறைகேடு நடந்திருப்பதாகச் சந்தேகித்த சண்முகபாண்டியன், தனது சாவியைத் திரும்பக் கேட்டார். ஆனால் சாவி தர மறுக்கப்பட்டதால், அவர் லாக்கரை உடைத்துத் திறந்தபோது, அதில் இருந்த 1,000 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
மருமகன் குடும்பத்தினரிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர்கள் 100 சவரன் நகைகளை மட்டுமே திருப்பித் தந்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மாநகர குற்றப்பிரிவில் சண்முக பாண்டியன் புகார் அளித்தார்; அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
