அதிமுகவிலிருந்து விலகினார் சி.விஜயபாஸ்கர்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
அதிமுகவிலிருந்து விலகினார் சி.விஜயபாஸ்கர்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
UPDATED : ஜூன் 16, 2026 05:29 PM
ADDED : ஜூன் 16, 2026 03:47 PM

சென்னை: புதுக்கோட்டை விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று( ஜூன் 16) தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிருப்தி
சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் இபிஎஸ்க்கு எதிராக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை அணி திரட்டி, தனி அணியாக செயல்பட துவங்கினர். தவெக அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக - எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். இதனால், அதிருப்தி அணியில் இருந்த அனைவரின் கட்சி பதவிகளையும் பழனிசாமி பறித்தார். தொடர்ந்து, தவெக., அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என, அதிருப்தி அணி எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை தன் அமைச்சரவையில் சேர்க்க, முதல்வர் விஜய் மறுத்து விட்டார். இதனால், அதிருப்தி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸிடம் இணைந்தனர்.
விமர்சனம்
ஆனாலும், பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இதனால், அதிமுகவின் பலம் 43 ஆக குறைந்தது. அதிலும், எம்எல்ஏக்களாக உள்ள முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இன்னும் அதிருப்தியாளர்களாகவே நீடித்தனர். சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அவரும்இபிஎஸ்ஐ விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு வந்தார்.
ஏற்பு
இந்நிலையில், சி.விஜயபாஸ்கர், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் நேரில் வழங்கினார். ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் 6 சட்டசபை தொகுதிகள் காலியாகி உள்ளன. மேலும் ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
விலகல்
இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல. பெரிய பெருமையாகவும் பெரும் வரமாகவும் என் பாக்கியமாகவும் கருதினேன்.
ஆனால், இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும்நிலை உருவாகியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த சூழலில் மனமெல்லாம் தீராத வேதனைகளையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
எனவே, கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் இந்த மகத்தான இயக்கத்தில் இருந்து மனவலியோடு விலகுகிறேன். நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல. என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் கனத்த இதயத்துடன் இயக்கத்தில் இருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம் போல் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
யார் இந்த விஜயபாஸ்கர்?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
நேரலை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்த நேரலை தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பார்க்க: https://www.youtube.com/watch?v=WiopFvL9t20
