தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பழனிசாமி மீது சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு!: நாளுக்கு நாள் கட்சி தேய்ந்தாலும் மவுனம் காப்பது ஏன் என கேள்வி

பழனிசாமி மீது சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு!: நாளுக்கு நாள் கட்சி தேய்ந்தாலும் மவுனம் காப்பது ஏன் என கேள்வி

பழனிசாமி மீது சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு!: நாளுக்கு நாள் கட்சி தேய்ந்தாலும் மவுனம் காப்பது ஏன் என கேள்வி

38


UPDATED : ஜூன் 15, 2026 12:07 AM

ADDED : ஜூன் 14, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

38

UPDATED : ஜூன் 15, 2026 12:07 AM ADDED : ஜூன் 14, 2026 11:42 PM


38
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ''நாளுக்கு நாள் கட்சி தேய்ந்தாலும், மவுனம் காப்பது ஏன்? பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட மறுப்பது ஏன்,'' என, பழனிசாமியை நோக்கி கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 47 தொகுதிகளில் மட்டும் வென்றது. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமல் திணறியபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். இக்குழுவுக்கு சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.

இக்குழுவிற்கு அமைச்சர் பதவி தருவதாக, த.வெ.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. சட்டசபையில் த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபித்த பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கு அமைச்சர் பதவி தர, த.வெ.க., மறுத்து விட்டது.

குழப்பம்


இதனால், அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பழனிசாமி அணிக்கு திரும்பினர். நான்கு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். இதற்கிடையே, தனக்கு எதிராக சென்ற எம்.எல்.ஏ.,க்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்து விட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

த.வெ.க., கைவிட்டதால், மீண்டும் தன்னிடம் அடைக்கலமான எம்.எல்.ஏ.,க்களுக்கு, பறித்த பதவிகளை பழனிசாமி தரவில்லை. இது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் த.வெ.க.,வை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியதால், கட்சி பதவியை பறிகொடுத்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதை வெளிப்படுத்தும் விதமாக, முன்னாள் அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. யாரும் கேள்வி கேட்கக்கூடாது; பேசக் கூடாது; கருத்து சொல்லக்கூடாது என்ற சர்வாதிகார போக்கில் பழனிசாமி செயல்படுகிறார்.

இழப்பு


'யாருடைய ஆலோசனையையும், கருத்தையும் கேட்க மாட்டேன்; ஏற்க மாட்டேன்; என் குடும்பத்தாருடைய கருத்தை மட்டும் கேட்பேன்' என்கிறார். இதனால் தான், அ.தி.மு.க., பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

'தீய சக்தியான தி.மு.க., ஒழிக்கப்பட வேண்டும்' என, எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க., தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தை தி.மு.க.,வோடு இணைத்து, தான் முதல்வராக வேண்டும் என பழனிசாமி நினைத்த போதே, அ.தி.மு.க., தன் சுய நிலையை இழந்து விட்டது.

இன்றைக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்து கொத்தாக விலகுகின்றனர். சீட்டுக் கட்டு போல் கட்சி சரிந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் 47 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக சொல்கின்றனர். இதில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது, பா.ம.க., போட்ட பிச்சை.

கூட்டணியில் அந்த கட்சி இல்லையென்றால், வட மாவட்டங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்க முடியாது. பழனிசாமியே சேலத்தில் தட்டு தடுமாறித்தான் வெற்றி பெற்றிருப்பார். பா.ம.க., இல்லாவிட்டால், வெறும் ஏழு தொகுதிகளில் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும்.

அ.தி.மு.க., தலைமை தன் தவறை திருத்திக்கொள்ள மறுக்கிறது. தன்னை சுற்றி ஒரு வேலியை பழனிசாமி போட்டுக் கொண்டு, ஜால்ராக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்; தன் மகனை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்.

அரவணைப்பு


கட்சி, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கிறது. இப்போதும் அ.தி.மு.க.,வுக்கு நீங்கள் தான் பொதுச்செயலர். எங்களிடமும் குறைகள் இருக்கலாம். குறை, நிறை இல்லாத மனிதர்களே கிடையாது.

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும். மீண்டும் அ.தி.மு.க., வலிமையான இயக்கமாக வேண்டும். அதற்கு, பழனிசாமி எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

தேர்தல் தோல் விக்கான காரணத்தை ஆராய, பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். இல்லையென்றால், நாங்கள் சில காலம் பொறுப்போம். எங்களுக்கு வழிமுறைகள் தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

'த.வெ.க.,வின் கைக்கூலியாக மாறிவிட்டார்'


அ.தி.மு.க., விழுப்புரம் மாவட்ட செயலர் பசுபதி அளித்த பேட்டி: த.வெ.க., தேர்தல் அறிக்கையில், விவசாய கடன் முழுதும் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, 2,044 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க., அரசை கண்டித்து, விழுப்புரத்தில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும், த.வெ.க.,விற்கு துணை போகும் முன்னாள் அமைச்சர் சண்முகம், பழனிசாமி குறித்து தவறான செய்திகளை கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றி, பா.ம.க., போட்ட பிச்சை என கூறி, அ.தி.மு.க., தொண்டர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க., இருந்தும், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தோம். பழனிசாமி குடும்ப அரசியல் செய்யவில்லை.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் தன் அண்ணனை வைத்து குடும்ப அரசியல் செய்தவர் சண்முகம். மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில், 'சீட்' கொடுத்தது சண்முகம். எனவே, அவர் தான் தோல்விக்கு காரணமானவர். தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி பேசியதாக சண்முகம் பொய் சொல்லி வருகிறார்; கட்சியை உடைக்க நினைக்கிறார். த.வெ.க., துாண்டுதலில் இது நடக்கிறது. த.வெ.க.,வின் கைக்கூலியாக சண்முகம் மாறிவிட்டார். அ.தி.மு.க.,வினரை த.வெ.க.,விற்கு அனுப்புவது சண்முகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us