பிண்ணாக்கில் இருந்து புரதச்சத்து தயாரிப்பு தொழில் துவங்க அரசு தருகிறது மானியம்
பிண்ணாக்கில் இருந்து புரதச்சத்து தயாரிப்பு தொழில் துவங்க அரசு தருகிறது மானியம்
ADDED : ஜூலை 05, 2025 10:27 PM
சென்னை:பல நாடுகளில் தாவரம் சார்ந்த கடலை மற்றும் எள் பிண்ணாக்கில் இருந்து எடுக்கப்படும் புரதச்சத்துக்களுக்கு தேவை அதிகம் உள்ளது.
எனவே, இந்த வகை பிண்ணாக்குகளில் இருந்து புரதச்சத்து தயாரிக்கும் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில், கோழி இறைச்சி உள்ளிட்ட மாமிசத்திலும், பருப்பு வகைகள், பயறுகள் போன்ற தானியங்களிலும், 'புரோட்டின்' எனப்படும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் எடுத்த பின், கடலை பிண்ணாக்கும், எள்ளில் இருந்து நல்லெண்ணெய் எடுத்த பின், எள்ளு பிண்ணாக்கும் கிடைக்கிறது. இவற்றில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடலை பிண்ணாக்கில் 50 சதவீதமும், எள்ளு பிண்ணாக்கில் 40 சதவீதமும் புரதச்சத்து உள்ளது. தற்போது, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் மாமிசம் சார்ந்த புரதச்சத்துக்கு பதில், தாவரம் சார்ந்த புரதச்சத்து அதிகம் கிடைக்கும் உணவுக்கு, மக்கள் மாறி வருகின்றனர்.
எள், கடலை பிண்ணாக்குகளில் இருந்து எடுக்கப்படும் புரதச்சத்துக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகம் உள்ளது.
இதற்கான தொழில்நுட்பம் நம் நாட்டில், பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும், மத்திய அறுவடைக்கு பிந்தைய இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப பயிலகத்திடம் உள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் கடலை, எள் பிண்ணாக்குகள் அதிகம் கிடைக்கின்றன. எனவே, அங்குள்ள இளைஞர்களுக்கு நல்ல தரத்தில் கடலை பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கில் இருந்து புரதச்சத்துக்களை மாவாக பிரித்தெடுப்பது தொடர்பாக பயிற்சி அளிப்பதுடன், அது சார்ந்த தொழில் துவங்க மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது.
இதற்கு மத்திய அரசிடம், 25 கோடி ரூபாய் பெறப்படும். இத்திட்டம், டி.என்.எபெக்ஸ்., நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படும்.
பிண்ணாக்கு தொழிலை ஊக்குவிப்பதன் வாயிலாக, உள்ளூரில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோரும் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

